த.வா.க., நிர்வாகி தலைமறைவு சென்னை விரைந்த தனிப்படை
புதுச்சேரி: பணம் கேட்டு இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில், தலைமறைவாக உள்ள த.வா.க., மாநில பொறுப்பாளரை கைது செய்ய, தனிப்படை சென்னைக்கு விரைந்துள்ளது. புதுச்சேரி த.வா.க., மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர், புதுச்சேரி போக்குவரத்து பிரிவு எஸ்.பி., மீது ஐகோர்டில்தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற, 1 கோடி ரூபாய், கேட்டு பேரம் பேசினார். இது தொடர்பாக, கட்சி நிர்வாகி பாபு, கடந்த 31ம் தேதி, ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம், எம்.பி.,யிடம் பணத்தை பெற்று தரும்படி, அவரை மிரட்டினார். இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில்,பாபு மற்றும் ஸ்ரீதர் மீது போலீசார் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தொடர்பாக, தலைமறைவான ஸ்ரீதர், சென்னையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில், தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர். இதற்கிடையே ஸ்ரீதர் புதுச்சேரி கோர்ட்டில் முன் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்நிலையில், ஸ்ரீதர் மீது தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை அலுவலக துணை ஆணையரை மிரட்டியதாக கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.