பி.ஆர்.டி. சி., பணிமனையில் சிறப்பு மருத்துவ முகாம்
புதுச்சேரி: போக்குவரத்து துறை சார்பில், நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 96 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, போக்குவரத்து துறை சார்பில், நேற்று பி.ஆர்.டி.சி., பணிமனை வளாகத்தில் சிறப்பு கண் மற்றும் காது பரிசோதனை முகாம் நடந்தது. முகாம், துணை போக்குவரத்து ஆணையர் வினய்ராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பிரபாகர ராவ், ரமேஷ் மற்றும் அங்காளன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமையும் பார்வைத் திறன் குறைபாடு மற்றும் கேட்கும் திறன் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக முகாம் நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என, மொத்தம் 96 பயனாளிகள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனர்.