வாழ்வியல் திறன்களை வளர்க்க மாநில அளவில் நடன போட்டி
புதுச்சேரி: மாணவர்களின் வாழ்வியல் திறன்களை வளக்கும் வகையில், மாநில அளவிலான நாட்டுப்புற நடன மற்றும் நடிப்பு போட்டி நடந்தது. என்.சி.இ.ஆர்.டி.,யின் தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்களின் வாழ்வியல் திறன்களை வளர்ப்பது தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு இடையே நாட்டுப்புற நடனம் மற்றும் நடித்தல் போட்டிகள் நடத்தப் படுகிறது. அதன்படி, இந்தாண்டு, மாநில அளவிலான போட்டி லாஸ்பேட்டை, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேற்று துவங்கியது.நிகழ்ச்சியில், கல்வி இணை இயக்குனர் சிவகாமி தலைமை தாங்கினார். மாநில பயிற்சி மையத்தின் சிறப்பு பணி அலுவலர் சுகுணா சுகிர்தபாய் வரவேற்றார். இந்த போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில அளவிலான போட்டியில், வெற்றிப்பெறும் அணி, தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மாநில பயிற்சி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூர்ணா மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.