புகையிலை கட்டுப்பாடு குறித்து மாநில அளவிலான பயிலரங்கம்
புதுச்சேரி: இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், புகையிலை கட்டுப்பாடு குறித்த மாநில அளவிலான பயிலரங்கம் நடந்தது. புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய சுகாதார இயக்கம், புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி, பயிலரங்கை துவக்கி வைத்து, பேசினார். மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் வரவேற்றார். திட்ட இயக்குநர் கோவிந்தராஜன், மருத்துவ கல்லுாரி சமூக மருத்துவத் துறைத் தலைவர் கவிதா வாசுதேவன் ஆகியோர் துவக்கவுரையாற்றினார். டாக்டர்கள் ராமச்சந்திர பட், செவ்வேள் ஆகியோர் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில், புகையிலையின் தீமைகள், புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள், புதுச்சேரியில் புகையிலை பரவலைக் கட்டுப்படுத்தும் முறைகள், புகையிலை இல்லாத கிராமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாட்டுக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. அதில், புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, மாநில புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு, புதுச்சேரியில் இதுபோன்ற உயர் மட்டப் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்வது என, முடிவு செய்யப்பட்டது. உதவி பேராசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, மாநில ஆலோசகர் சூரியகுமார் செய்திருந்தார்.