கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு மாநில தலைவர் ராமலிங்கம் எச்சரிக்கை
புதுச்சேரி: கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் எம்.எல்.ஏ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் எச்சரித்துள்ளார். அவர், கூறியதாவது; புதுச்சேரியில் 21 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தப்பணி நடைபெற உள்ளது. கடந்த 1954ம் ஆண்டு முதல் நாடு முழுதும் 8 முறை சிறப்பு வாக்காளர் திருத்த பணி நடந்துள்ளது. ஆனால் இது, ஏதே புதிதாக நடைபெறுவது போல் காங்., கட்சியினர், ஓட்டு திருட்டு என பொய் தகவலை மக்கள் மத்தியில் பரபரப்பி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளோரின் பெயர்களை நீக்குவதே திருத்தப் பணியின் நோக்கம். ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் கூறுகிறார். அப்படியென்றால், கடந்த லோக்சபா தேர்தலில் காங்., - தி.மு.க., கூட்டணி ஓட்டு திருட்டில் தான் வெற்றி பெற்றதா? ஜே.சி.எம்., மன்றத்திற்கும், பா.ஜ.,விற்கும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. இந்த மன்றத்தின் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பிரிட்ஜ், ஸ்விட் மற்றும் பட்டாசு வழங்கி னர். நான் உட்பட, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் திருப்பி கொடுத்துவிட்டோம். சிலர் கொடுக்கவில்லை. கட்சிக்கு சம்பந்தமில்லாதவரிடம் இருந்து எந்த பொருட்களும் வாங்கக்கூடாது என, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளனர். அதேபோன்று கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இப்பிரச்னைகள் குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம். கட்சி மேலிட பொறுப்பாளர்கள் நாளை 1ம் தேதி புதுச்சேரி வருகின்றனர். அவர்கள், இப்பிரச்னைகளை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். புதுச்சேரியில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி தொடரும். மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி இருந்தால்தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும். தடையின்றி, நலத்திட்டங்கள் கிடைக்கும். யாருடன் கூட்டணி அமைத்தால் மக்களுக்கு நல்லது என்பதை அறிந்தவர் முதல்வர் ரங்கசாமி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.