அரசு பள்ளியில் உலா வரும் மாடு, நாய்களால் மாணவிகள் அச்சம்
புதுச்சேரி: முதலியார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலா வரும் மாடு, தெரு நாய்களால் மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.முதலியார்பேட்டை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் தெரு நாய்கள் தினசரி பள்ளி வளாகத்திற்கு வந்து விளையாட்டு மைதானங்களில் உலா வருவதுடன், அங்கேயே படுத்து கிடக்கின்றன.இதனால், விளை யாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள மாணவிகள் மைதானத்திற்கு வருவதற்கே அச்சப்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அத்துமீறி பள்ளி வளாகத்தில் வந்து விளையாடுவதுடன், மது அருந்துவது, அங்கு குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கேள்வி எழுப்பினால், இது எங்களுடைய ஏரியா நீங்கள் யார் எங்களை கேட்பது என மிரட்டுவதாக பள்ளியின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளியில் போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால், குடிநீர் தொட்டி மற்றும் பள்ளி வளாகம் முழுதும் போதிய பராமரிப்பு இன்றி சுகாதாரம் மற்ற நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.எனவே, பள்ளி வளாகத்திற்கு வரும் மாடு மற்றும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதலாக துாய்மை பணியாளர்களை நியமிக்கவும், அத்துமீறி பள்ளி வளாகத்திற்குள் வரும் இளைஞர்களை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.