மாணவர்கள் வேலை தருபவர்களாக உயர வேண்டும்: கவர்னர் கைலாஷ்நாதன் ‘அட்வைஸ்’
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியின் 30வது ஆண்டு துவக்க விழா மற்றும் ரூ.80 கோடியில் கட்டடப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் அருணா வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். கட்டடத்தை திறந்து வைத்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: இங்கு படிக்கும் ஆயிரத்து இருநுாறு மாணவர்களில் 78 சதவீத மாணவர்கள் முதல்தலைமுறை பட்டதாரிகள் என, கேள்விபடுவது நெகிழ்ச்சியாக உள்ளது. படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை தருபவர்களாக நீங்கள் உயர வேண்டும். அதற்காக மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, உள்ளிட்ட திட்டங்கள் உதவியாக இருக்கும். இந்தியாவில் 2.5 சதவீத வேலைவாய்ப்புகள் மட்டுமே அரசு துறைகளில் இருக்கிறது. மீதம் உள்ள 9.75 சதவீத வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் துறைகளால் உருவாக்க முடியும் என ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இந்த கல்லுாரி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களை இந்தியா வென்றது. இதில், தடகளம், கபடி, மல்யுத்தம், போன்றவற்றில், கிராமப்பகுதியில் இருந்து சென்றவர்கள் தான் வென்றுள்ளனர். அப்துல்கலாம் கூறியது போல், உயர்ந்த இலக்குகளை நோக்கி கனவு காணுங்கள். இந்தியாவின் மக்கள் தொகயைில் 30 சதவீதம் பேர் இளைஞர்கள். அதை பிரதமர் யூத் சக்தி என கூறுகிறார். அவர் முன்னெடுத்த விக்சித் பாரத் 2047, கனவோடு நாம் பயணித்துக் கொண்டிருக்கிறாம். இன்று துவக்கி வைக்கப்படும் இந்த கட்டடம் மாணவர்களின் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தும்’ என்றார். விழாவில், சாதனை மலர் வெளியிடப்பட்டது. பல்கலை பதிவாளர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.