| ADDED : டிச 25, 2025 05:13 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதியின்றி சிலை வைத்த விவகாரத்தில் பா.ஜ.,-கம்யூ.,வினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பில், இந்திய கம்யூ., கட்சியினர் தங்கள் அனுபவத்தில் உள்ள கட்டடத்தில் லெனின் சிலையை அமைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் இரவு லெனின் சிலை அருகில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர். ஆத்திரமடைந்த கம்யூ., கட்சியினர் விநாயகர் சிலையை அகற்ற முயன்றதால் பதட்டம் நிலவியது. போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பையும் கலைத்தனர். பின்னர் தாசில்தார் பிரித்திவிராஜ், லெனின் சிலையை மூடினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூ., கட்சியினர் வாக்குவாதம் செய்ததை தொடர்ந்து இரவு 11 மணிக்கு பிறகு லெனின் சிலையை கம்யூ., கட்சியினர் மீண்டும் திறந்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சப் கலெக்டர் இருதரப்பினரையும் தனித்தனியே அழைத்து விசாரித்தார். அப்போது, இந்து முன்னணி மற்றும் பா.ஜ., தரப்பினர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பொது அரசு இடத்தில் வைத்த சிலையை அகற்ற வேண்டும் என்றனர். கம்யூ., கட்சியினர் சிலை வைக்கப்பட்ட இடம் கடந்த 50 ஆண்டாக எங்கள் பராமரிப்பில் உள்ளது என்றனர். தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும். புத்தாண்டிற்கு பின் பேசி உரிய தீர்வு காணலாம் என சப் கலெக்டர் உத்தரவிட்டார். இந்திய கம்யூ., போலீசில் புகார் இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ., மற்றும் இந்து முன்னணியினர் தேவையின்றி கலவரத்தை துாண்டுகின்றனர். லெனின் சிலையை பொதுமக்கள் ஒத்துழைப்புடன், கடந்த 50 ஆண்டாக எங்கள் பராமரிப்பில் உள்ள இடத்தில் வைத்துள்ளோம். நாங்கள் வைத்தது தவறு என்றால், அரசிடம் அவர்கள் முறையிடலாம். மாறாக விநாயகர் சிலையை வைப்பது கலவரத்தை துாண்டும் செயல். இது தொடர்பாக எங்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் அளித்துள்ளோம். எங்கள் தரப்பு நியாயத்தை அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.