லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் சஸ்பெண்ட் கலெக்டர் குலோத்துங்கன் அதிரடி
புதுச்சேரி : புதுச்சேரியில் பத்திரம் பதிவு செய்ய, ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும், இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில், புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிய வந்த ஒருவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று ரூ.௨0 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், இந்த சம்பவம் கடந்த 16.10.24 அன்று நடந்ததாகவும், இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பதிவாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், வீடியோவின் ஒரு பகுதியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயசங்கர், கவர்னர், டி.ஜி.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,க்கு நேற்று முன்தினம் புகார் மனு அனுப்பினார்.அதன்பேரில், இப்புகார் குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத்துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.இந்த லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கும் வந்தது
இதுகுறித்து பதிவாளர் தயாளனிடம் கேட்டபோது, இந்த வீடியோ எனக்கும் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றார்.