உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 3.88 கி.மீ., தொலைவிற்கு பிரமாண்டமாய் இந்திரா - ராஜிவ் சதுக்க உயர்மட்ட மேம்பாலம்

3.88 கி.மீ., தொலைவிற்கு பிரமாண்டமாய் இந்திரா - ராஜிவ் சதுக்க உயர்மட்ட மேம்பாலம்

புதுச்சேரி : இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை பிரமாண்டமாக ரூ. 436 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 436 கோடி ரூபாயில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வைத்துள்ள நிலையில் இந்த உயர்மட்ட மேம்பாலம் மொத்தம் 3.877 கி.மீ., நீளம் கொண்டதாக பிரமாண்டமாக அமைய உள்ளது. மொத்தம் 30 மாதத்தில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் இந்திரா சதுக்கத்துக்கு தெற்கே 430 மீட்டர் தொலைவில் நடேசன் நகர் சந்திப்பில் தொடங்கி, ராஜிவ் சதுக்கத்திற்கு உள்வட்ட இணைப்பினை கொடுத்து அடுத்து கொக்கு பார்க்கினை தாண்டி வடக்கு நோக்கி இ.சி.ஆர் வழியாக நகர்ந்து இண்டெகரா அருகில் இறங்குகிறது. இதன் மொத்த நீளம் 2 ஆயிரத்து 200 மீட்டர். ராஜிவ் சதுக்கத்தில் இருந்து கணக்கிட்டால் 620 மீட்டர் தொலைவில் 17 மீட்டர் அகலத்தில் இண்டெகரா அருகில் இந்த பாலம் இறங்குகின்றது. இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை கணக்கிட்டால் 1,150 மீட்டர் நீளத்திலும் 20.5 மீட்டர் அகலத்திலும் மேம்பாலம் அமையும். இந்திரா சதுக்கத்தில் அமைய உள்ள மேம்பாலம், 17 மீட்டர் உள்விட்டம் கொண்டதாக இருக்கும். இங்கு கிழக்கு- மேற்காகவும் மேம்பாலம் அமைகிறது. இந்திரா சதுக்கத்தில் இருந்து கிழக்கு நோக்கி 863 மீட்டர் வரை செல்லும் மேம்பாலம் புவன்கரே வீதி சந்திப்பு, நெல்லித்தோப்பு சுப்பையா சிக்னலை தாண்டி புது பஸ் ஸ்டாண்டினை நோக்கி 9 மீட்டர் அகலத்தில் இறங்குகின்றது. மேற்கில் விழுப்புரம் நோக்கி 300 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் செல்கின்றது. இந்த மேம்பாலம் பூமியான்பேட்டை குண்டுசாலை சந்திப்பினை தாண்டி ஜவகர் நகரில் 9 மீட்டர் அகலத்தில் இறங்குகின்றது. விழுப்புரம் வழித்தடத்தில் வரும் வாகனங்கள் இந்திரா சிக்னலில் இனி காத்திருக்காமல் மேம்பாலம் வழியாக புது பஸ் ஸ்டாண்டிற்கு நேரடியாக சென்றுவிடலாம். ராஜிவ் சதுக்கத்தினை பொருத்தவரை 40 மீட்டர் உள்விட்டம் கொண்ட வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இங்கு காமராஜர் சாலை, வழுதாவூர் சாலையில் இணைப்பு மேம்பாலம் இல்லை. கோரிமேடு நோக்கி 524 மீட்டர் அளவில் இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இது தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையை தாண்டி கீழே 16.5 மீட்டர் அகலத்தில் இறங்குகின்றது. துாண்கள் இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்க இணைக்கும் மேம்பாலத்தில் பிரதானமாக 63 துாண்கள் 1.821 கி.மீ., தொலைவிற்கு அமைய உள்ளது. பஸ்டாண்ட் மார்க்கத்தில் 30க்கு 23 மீட்டர் இடைவெளியில் 0.690 கி.மீ., தொலைவிற்கும், விழுப்புரம் மார்க்கத்தில் 30க்கு 5 மீட்டர் இடைவெளியில் 0.150 கி.மீ., தொலைவிற்கும், கோரிமேடு மார்க்கத்தில் 30க்கு 11 இடைவெளியில் 0.330 கி.மீ., தொலைவிற்கும் துாண்கள் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டத்தில் 3.757 கி.மீ., தொலைவிற்கு அணுகு சாலை அமைகிறது. மேலும் 12 சிறுபாலங்கள் புனரமைப்பு இத்திட்டத்தில் இணைந்துள்ளது. 6 முக்கிய சந்திப்புகள், 16 சிறிய சந்திப்புகள் என 22 சந்திப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தால் புதுச்சேரி நகர போக்குவரத்து நெரிசல் 55 சதவீதம் குறையும். பயண நேரம் 35 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறையம். தினமும் 60 ஆயிரம் வாகனங்கள் செல்ல முடியும். வாகன எரிபொருள் மிகுதியாக குறையும். இந்த திட்டத்தால் 9 லட்சம் மக்கள் பயன் பெறுவர் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ