மண்டபத்திற்கு சீல் வைக்க முயற்சி தவளக்குப்பத்தில் பரபரப்பு
அரியாங்குப்பம் : உரிமம் புதுப்பிக்காத திருமண மண்டத்திற்கு கொம்யூன் அதிகாரிகள் 'சீல்' வைக்க சென்றதால் பரபரப்பு நிலவியது. தவளக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளர் இறந்ததை தொடர்ந்து, மண்டபம் வேறு நபருக்கு விற்கப்பட்டது. அவர், கொம்யூன் உரிமத்தை புதுப்பிக்காமல், நிகழ்ச்சிகள் நடத்தினார்.இந்நிலையில், மண்டத்தில் உரிமை கோரிய நபர், உரிமம் புதுப்பிக்காமல் நிகழ்ச்சி நடத்துவதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், மண்டபத்தை நிர்வகித்து வருபவருக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பியும், நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டது.அதனையொட்டி, கொம்யூன் ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று மண்டபத்திற்கு 'சீல்' வைக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். அப்போது மண்டபத்தை தற்போது நிர்வகித்து வருபவரும், உரிமை கோரியவரும், கோர்ட்டில் வழக்கு முடியும் வரை, நிகழ்ச்சி நடத்த மாட்டோம் உறுதியளித்தனர். அதனையேற்று அதிகாரிகள் 'சீல்' வைக்காமல் திரும்பி சென்றனர்.