ஒரே பாடத்தில் 45 மாணவர்கள் தோல்வி மறுமதிப்பீடு செய்ய முதல்வர் உத்தரவு
புதுச்சேரி:சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி அடைந்ததால், முதல்வரின் உத்தரவின் பேரில் மறுகூட்டலுக்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அரசு பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமல்படுத்திய முதல் ஆண்டிலேயே அதிக தேர்ச்சி பெற்று, பலரையும் வியக்க வைத்துள்ளது. அதேநேரத்தில் பிரதான பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண் குறைவாக உள்ளது. குறிப்பாக சவுரிராஜூலு நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 67 மாணவர்களில், 45 பேர் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். அதுவும், ஒற்றை இலக்கில் மதிப்பெண் பெற்றிருப்பது, மாணவர், பெற்றோர் மட்டுமன்றி ஆசிரியர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று முன்தினம், சட்டசபையில் முதல்வரை சந்தித்து முறையிட்டனர். உடன் முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை செயலர் பிரியதர்ஷினியை அழைத்து, சம்மந்தப்பட்ட மாணவர்களின் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், உடனடி தேர்விற்கு தயார் படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில், கல்வித்துறை அதிகாரிகள், பொதுத் தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களின் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.