புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியத்தில் இதுவரை சராசரி மழை மட்டுமே பெய்துள்ள போதிலும், சங்கராபரணியாறு, பம்பையாற்றில்ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், 26 படுகை அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. புதுச்சேரியின் பிராந்தியத்தின் சராசரி மழையளவு 1,200 மி.மீ., இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,107 மி.மீ., மழை பெய்ந்துள்ளது. வட கிழக்கு பருவ மழை 337 மி.மீ., பெய்ததால் புதுச்சேரி தப்பியது. இன்னும் சராசரி மழையளவை எட்ட இன்னும் 93 மி.மீ., தொட வேண்டியுள்ளது. இருப்பினும், தமிழக, கர்நாடகா பகுதிகளில் பெய்த கனமழையால் அதன் பலனை புதுச்சேரி அறுவடை செய்துள்ளது. கனமழை காரணமாக தமிழக பகுதியில் அமைந்துள்ள வீடூர் அணை, சாத்தனுார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, திறந்துவிடப்பட்டன. இதன் காரணமாக சங்கராபரணியாற்றிலும், தென்பெண்ணையாற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் அதன் கிளை நதியான பம்பையாற்றிலும் வெள்ளம் ஓடியது. இதன் காரணமாக புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தமுள்ள 26 படுகை அணைகள் நிரம்பியுள்ளன. சங்கராபரணியாற்றில் மணலிபட்டு, செட்டிப்பட்டு, பிள்ளையார்குப்பம், உறுவையாறு, சுண்ணாம்பாறு, ஆகிய இடங்களில் படுகை அணைகள் உள்ளன. 1.50 மீட்டர் ஆழம் கொண்ட மணலிப்பட்டு படுகை அணை முழுதுமாக நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது. பிள்ளையார்குப்பம் படுகை அணை உடைந்ததால் சுத்தமாக தண்ணீர் நிற்கவில்லை. 1.60 மீட்டர் ஆழம் கொண்ட உறுவையாறு படுகை அணை நிரம்பி, உபரி நீர் வழிந்தோடி வருகிறது. சுண்ணாம்பாறு படுகை அணை தனது முழு கொள்ளளவான 1.65 மீட்டர் ஆழத்தை எட்டி தண்ணீர் ததும்பி நிற்கின்றது. செட்டிப்பட்டு படுகை அணையும் முழு கொள்ளளவான 1.50 மீட்டர் ஆழத்தை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது. உபரிநீர் வழிந்தோடுகிறது. இதேபோல் பம்பையாற்றின் குறுக்கே சன்னியாசிக்குப்பம், சகடப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, சிலுக்காரி பாளையம் ஆகிய இடங்களில் படுகை அணைகள் தண்ணீரை சேமிக்க கட்டப்பட்டுள்ளன. சன்னியாசிக்குப்பம் படுகை அணை மொத்தம் 1.50 மீட்டர் ஆழம் கொண்டது. இதில் 1.30 மீட்டர் ஆழத்திற்கு அதாவது 87 சதவீதத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. சகப்பட்டு படுகை அணை, சோரப்பட்டு படுகை அணைகள் தலா 2 மீட்டர் ஆழம் கொண்டவை. இவை இரண்டும் முழு கொள்ளவை எட்டி தண்ணீர் அலைபோல் கரையோரம் மோதுகின்றன. செல்லிப்பட்டு படுகை அணை 1.25 மீட்டர் ஆழம் கொண்டது. இது நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. 1.50 மீட்டர் ஆழம் கொண்ட சிலுக்காரிபாளையம் படுகை அணையில் 1.30 மீட்டர் ஆழத்திற்கு அதாவது 87 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. புதுச்சேரியில் வற்றாத ஜீவ நதிகள் இல்லாத சூழ்நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த படுகை அணைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தாண்டு முழுதுமாக படுகை அணைகள் நிரம்பியுள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.