| ADDED : அக் 13, 2025 06:26 AM
புதுச்சேரி; இருட்டின் பிடியில் சிக்கியிருந்த லாஸ்பேட்டை மைதானம் இன்று ஒளியும், உயிரும் நிரம்பிய யோகா மையமாக மாறி மக்களின் வாழ்க்கையில் புதிய உயிர் ஊட்டுகிறது. லாஸ்பேட்டை மைதானம் என்றதும், பலருக்கும் கும்மிருட்டாக இருக்கும் அதன் பயமூட்டும் காட்சிகள் தான், நினைவுக்கு வந்து போகும். இப்போது லாஸ்பேட்டை மைதானத்தை போய் பார்த்தால், உங்களுடைய எண்ணத்தை அப்படியே ரப்பர் போட்டு அழித்து விடுவீர்கள். இருட்டின் பிடியில் சிக்கி கிடந்த லாஸ்பேட்டை மைதானத்தில் லைட்டுகள் போட்டபிறகு ஒளி வெள்ளத்தில் அதனுடைய முகமே மாறியுள்ளது. இப்போது உழவர்கரை நகராட்சியின் முயற்சியால் அடுத்தக்கட்ட பரிமாணமாக யோகா மையமாக மாறி வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடியற்காலை, மெல்லக் காற்றாட, பறவைகளின் இனிய குரல்கள் வானத்தை நனையச் செய்ய, லாஸ்பேட்டை மைதானத்தில் மக்கள் மெதுவாக வந்து தரை விரிப்புகளை விரித்து அமர்கிறார்கள். சுற்றிலும் பசுமை, காற்றின் சுவாசம், சூரியனின் மெல்லிய ஒளி இதையெல்லாம் இணைத்து ஒரு உயிர்ப்பான காட்சியாக மாறுகிறது மைதானம். சூர்ய நமஸ்காரம் தொடங்கலாம் என யோகா ஆசிரியர் மென்மையான குரல், காற்றில் பரவுகிறது. அந்த ஒலி கேட்கும் தருணத்தில் மனம் ஒரு அமைதியான சமுத்திரம் போல திளைக்கிறது. ஒவ்வொரு சுவாசமும் ஒவ்வொரு அசைவுமாக மனமும், உடலும் ஒன்றாய் சங்கமிக்கிறது. குப்பைகள், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களின் கூடாரமாக இருந்த லாஸ்பேட்டை மைதானம் இன்றைக்கு ஆரோக்கியத்தின் ஆலயமாக மாறியுள்ளது. சிறுவர்களிலிருந்து முதியவர்கள்வரை அனைவரும் 'ஓம்' என ஒலிக்கையில், காற்றே ஆன்மிக அதிர்வில் நெகிழ்கிறது. யோகா பயிற்சியாளர் புவனேஸ்வரி, மனமே அனைத்து செயல்களுக்கும் அச்சாணி. மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க யோகா உதவும். எந்த நேரத்திலும் பொறுமையைக் கையாளும் மனநிலையைத் தரும். உடல் உபாதைகள் வராமல் தடுக்கவும், ஏற்கெனவே உடலில் உள்ள உபாதைகளைச் சரி செய்யவும் வழிவகுக்கும். நோய்நொடியற்ற அமைதியான வாழ்வை வாழச்செய்யும். எனவே அனைவருமே யோகாவை தொடர்ந்து செய்ய வேண்டும். கற்றதை வீட்டில் செய்து பாருங்கள். அடுத்த ஞாயிறும் மறக்காம வந்துடுங்க என்றதும், யோகா பயிற்சியில் இருந்தவர்கள் உண்மை தான்.. நாங்களும் செய்வோம் என்று ஆமோதித்தப்படி கலைந்தனர். உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும் யோகாதெரபி முகாம் ஞாயிற்று கிழமை தோறும் லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்திலும், சனிக்கிழமை தோறும் வெங்கட்டா நகர் பூங்காவில் விடியற்காலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடக்கின்றது. உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள மறக்காம போய் விடுங்க.... அடுத்து விக்டோரியா நகர் பூங்கா உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், இன்றைய அவசர யுகத்தில் அனைவருக்குமே யோகா அவசியம். சமூகத்தின் ஒற்றுமையையும், மனநலத்தையும் உயர்த்தும் இத்தகைய முயற்சிகள் எடுத்து வருகின்றோம். அந்த வகையில் புதுச்சேரி மக்கள் மனதில் யோகா குறித்த நம்பிக்கையின் விதைகளை விதைத்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியே. அடுத்து உழவர்கரை விக்டோரியா நகர் பூங்காவில் யோகாதெரபி பயிற்சி விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றது என்றார்.