உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரெஞ்சியர் காலம் தொட்டே தொடரும் கவர்னரின் மரபு

பிரெஞ்சியர் காலம் தொட்டே தொடரும் கவர்னரின் மரபு

மரமே மூலவராக விளங்கும் கோவில், மீனவ சமுதாயத்தின் காவல் தெய்வம், புதுச்சேரி மாநிலத்தின் புகழ்பெற்ற சக்தி கோவில் என, பல்வேறு பெருமைகள் கொண்ட திருக்கோவிலாகத் திகழ்வது, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில். இந்த கோவில் தேரோட்டம், புதுச்சேரியிலேயே சிறப்பு மிக்கது. புதுச்சேரியின் எல்லாக் கோவில்களிலும் தான் தேர்த் திருவிழா நடக்கிறது. அப்படி இருக்கும்போது செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்திற்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல் இருக்கிறது என பலருக்கும் கேள்விகள் எழுந்து புருவத்தை உயர்த்தலாம். ஆனால் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நடக்கும் தேர்த் திருவிழாவை, மாநில கவர்னரும், முதல்வரும் சேர்ந்தே வடம் பிடித்து இழுத்து வைப்பார்கள். இது இன்று, நேற்றல்ல.. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து வரும் மரபாக இருக்கிறது. இது இந்த கோவிலில் தனி சிறப்பாகவும் இருக்கிறது. இக்கோவிலின் முதல் தேரோட்டம் கடந்த 13.08.1619ல் நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இது குறித்து அவர்கள் கூறும்போது,'பிரெஞ்சியர் காலத்திலும் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் பிரசித்து பெற்றது.ஒருமுறை பிரெஞ்சு கவர்னர் கடலில் பயணம் செய்தபோது விண்ணைமுட்டிய வாண வேடிக்கையை கண்டு வியப்புற்றுள்ளார். என்ன திருவிழா, யாருக்கு வாண வேடிக்கை என்று கேட்டறிந்தார். அப்போது செங்கழு நீர் அம்மன் மகிமையை கேட்டறிந்த அவர், உடனடியாக வீராம்பட்டினத்திற்கு கரை இறங்கி வந்துள்ளார். வீராம்பட்டினம் மக்கள் கவர்னரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்க வேண்டியதன் பேரில், கவர்னரும் விழாவில் கலந்து கொண்டதாக தெரிகிறது. அன்றிருந்து இன்று வரை கவர்னர் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 1901ம் ஆண்டில் வீராம்பட்டினம் தேர்விழா பற்றி பிரெஞ்சுக்காரர்கள் ஒருவர் தென்னிந்தியாவில் என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், தேர் திருவிழாவின்போது கடும் வெயிலில் பல சாதி மக்களும் அங்கு கூடி இருந்தனர். அங்கிருந்த தேரின் சக்கரங்களில் செங்கழு நீர் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த கோவில் மிகவும் பழமையானது. அம்மனின் தலையுருவம் பற்றிய கதை மூலம் அந்த அம்மன் அற்புத சக்தியை கொண்டவர் என்பதை அறிந்தேன் என, தேரோட்டத்தின்போது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பட்டியலிட்டு நம் கண்முன்னேகொண்டு வந்துள்ளார் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்... இந்தாண்டும் வீராம்பட்டினம் செங்கழு நீர் அம்மன் கோவில் தேரோட்டம் வரும் 15ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அதே உற்சாகம், கவர்னரின் மரபுடன் பண்டிகையாக கொண்டாட தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை