உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ஏ-பிளஸ் கிரேடு ; நாக் கமிட்டி அறிவிப்பால் மாநிலத்திற்கு பெருமை

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ஏ-பிளஸ் கிரேடு ; நாக் கமிட்டி அறிவிப்பால் மாநிலத்திற்கு பெருமை

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் தர சான்றிதழ் நாக் கமிட்டி அளித்துள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு நாக் கமிட்டி ஆய்வு செய்து, 'ஏ' கிரேடு தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது. மீண்டும் நாக் கமிட்டியின் அங்கீகாரம் பெற புதுச்சேரி பல்கலைக்கழகம் விண்ணப்பித்து இருந்த சூழ்நிலையில், கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாக் கமிட்டி ஆய்வு செய்தது.வழக்கமாக கல்வி நிறுவனங்களில் நாக் கமிட்டி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த முறை நாக் கமிட்டியினர் ஆன்லைன் மற்றும் நேரில் என இரண்டு வழிமுறைகளில் இந்த ஆய்வினை நடத்தினர். நாக் கமிட்டியினர் அறிக்கை சமர்பித்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் தர சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. நாக் கமிட்டி தர சான்றிதழ் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு கூறியதாவது:புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் தர சான்றிதழ் நாக் கமிட்டி அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் முழுமையான வளர்ச்சியில் சிறந்து விளங்கி வருகிறது.கூட்டு முயற்சிகள், அர்ப்பணிப்பு மூலம் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. முன்னணி மத்திய பல்கலைக்கழகமாக உள்ள நமது நிலையை இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய நமது பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி. பதிவாளர் மற்றும் அவரது குழுவிற்கும், அனைத்து சட்டப்பூர்வ அதிகாரிகளுக்கும் பாராட்டுகள். இந்த மைல்கல்லை நாம் ஒன்றாகக் கொண்டாடுவோம்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தை பிராந்திய ரீதியாகவும், உலக அளவிலும் உயர்கல்வியின் கலங்கரை விளக்கமாக மாற்றுவதற்கான நமது உறுதியைப் புதுப்பிப்போம்' என்றார்.

உச்சப்பட்ச தரநிலை

நாக் கமிட்டி கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்த பிறகு ஏ-பிளஸ் பிளஸ், ஏ-பிளஸ், ஏ, பி-பிளஸ் பிளஸ், பி-பிளஸ், பி, சி மற்றும் டி என்ற நிலைகளில் தர சான்றிதழ் அளிக்கிறது. தற்போது உச்சபட்ச தரநிலையான ஏ-பிளஸ் பிளஸ்க்கு அடுத்த நிலையில் உள்ள ஏ-பிளஸ் கிரேடு சான்றிதழை புதுச்சேரி பல்கலைக்கழகம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !