| ADDED : நவ 16, 2025 04:09 AM
பு துச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வட்டார வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நுாறு நாள் வேலை திட்ட பணி தொழிலாளர்கள் மூலம் ஏரி, குளம், வாய்க்கால்களை துார் வாருவது, அரசு பொது இடங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. சம்பளம் கேட்டு கிராம மக்கள் நடையாய் நடந்து வருகின்றனர். இதனை சித்தரிக்கும் வகையில் 'புதுவை தாத்தா' என்ற தலைப்பிலான 54 விநாடிகள் ஓடக் கூடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கார்ட்டூன் வீடியோவில் உள்ள விபரம் வருமாறு: முதியவர் ஒருவர், 'வணக்கம் மக்களே... வர, வர மாமியார் கழுதை போல் ஆனாளாம். அந்த கதையா போச்சு நுாறு நாள் வேலை திட்டம். புதுச்சேரி, காரைக்காலில் 108 கிராம பஞ்சாயத்துல 4 மாசமா சம்பளம் தரலையாம்... அதுலேயும் நுாறு நாள் வேலை திட்டத்தையே நிறுத்தி புட்டாங்களாம்ல... சம்பள பாக்கி ரூ.15 கோடி நிலுவையில இருக்காம். நானும் கம்மாய்ல வேலை பார்த்துட்டு சம்பளம் இந்தா வந்துரும், அந்தா வந்துரும்னு காத்து கிடக்கறேன்... இந்த என்.ஆர். அய்யா குடுத்த பாடில்லை. அவர் என்ன பண்ணுவார் பாவம். கல்லா பெட்டிதான் அவர் கையில இருக்கு. சாவி டில்லியில தானே இருக்கு... இது எப்படி தெரியுமா இருக்கு... அறுக்கத் தெரியாதவன் கையில ஆயிரம் கதிர் அருவா இருக்காம் என்ற கதையால்ல இருக்கு...' என முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.