| ADDED : நவ 11, 2025 06:35 AM
புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி கடந்த 4ம் தேதி தொடங்கியது. வீடு வீடாக சென்று சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை, 91 சதவீத பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், வீடு, வீடாக சென்று படிவத்தை திரும்ப பெறும் பணி துவங்கியுள்ளதாக வும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். பலருக்கு விண்ணப்ப படிவமே கிடைக்காத நிலையில் இது வீண் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் 91 சதவீத பேருக்கு வாக்காளர் படிவம் கொடுக்கப்பட்டதாக தேர்தல் துறை சொன்னாலும் உண்மையில் நகரப் பகுதியிலேயே பலரது வீடுகளுக்கு இன்னும் படிவம் கிடைக்கவில்லை. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பலரது வீட்டு பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. நகரப்பகுதியிலேயே இப்படி என்றால், கிராமங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. சரி கொடுத்த வீடுகளிலாவது ஒழுங்காக விண்ணப்படிவம் கொடுத்து உள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. இப்படி, ஒருதரப்பு மக்களுக்கு வாக்காளர் படிவம் கையில் கிடைத்திருக்க, மற்றொரு தரப்பு மக்களுக்கு வாக்காளர் படிவம் சென்றடையாதது மக்களிடையே தவிப்பினையும், வீண் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சரி எப்படியாவது வாக்காளர் படிவத்தை பெற்றுவிடலாம் என்று பலரும் முட்டி மோதி வருகின்றனர்.தேர்தல் துறை வெளியிட்டுள்ள ஓட்டுச்சாவடி அலுவலரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டால், அதிலும் ஓட்டை தான். வீண் அலைச்சல். ரிட்டையர்டு ஆகி சென்றவர்களெல்லாம் பேசுகின்றனர். அவர்களிடம் எப்படி பேசி, தற்போது பணியில் உள்ள ஓட்டுச்சாவடி அலுவலரை கண்டுபிடிப்பதே பொதுமக்களுக்கு பெரிய வேலையாக உள்ளது.அப்படியே கண்டுபிடித்தாலும், அவர்களிடம் விண்ணப்பம் படிவத்தை பெறுவதும் கடினமாக உள்ளது. இருங்க பார்த்துவிட்டு சொல்கிறோம் என துண்டிக்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க, பூர்த்தி செய்து கொடுத்த விண்ணப்ப படிவம் பெறுவதிலும் இப்போது குளறுபடி தலைதுாக்கியுள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்-தந்தை பெயரை செயலியில் பதிவேற்றம் செய்து, அதற்கான அத்தாட்சி சான்றிதழை கொடுக்கின்றனர்.ஆனால் 18 வயது பூர்த்தியடைந்து புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த மகன்-மகள் படிவத்தை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. தாய்-தந்தை பெயரை செயலி கேட்காமல், செயலியில் தாத்தா, பாட்டியின் பெயரெல்லாம் கேட்கின்றது. இது தொழில்நுட்ப பிரச்னை. நாங்கள் ஒன்றுமே செய்ய முடியாது என ஓட்டுச்சாவடி அலுவலர்கள், புதிய வாக்காளர் படிவத்தை செயலியில் ஏற்றாமல் கிடப்பில் போட்டு வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வேண்டும் என்று தேர்தல் துறை சொல்கிறது. அப்படி இருக்கும்போது ஒரே முறையில் வாக்காளர் இல்லவே இல்லை என்ற முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்பதே விண்ணப்ப படிவம் கிடைக்காதபொதுமக்களின் கேள்வியாக உள்ளது. இதுபோன்ற ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள் இருக்கும்போது,அவற்றையெல்லாம் சரி செய்யாமல்அவசரமாக வாக்காளர் படிவம் பெற வேண்டுமா என்பதை தேர்தல் துறை யோசிக்க வேண்டும். அனைத்து தரப்பினர்களுக்கு வாக்காளர் படிவம் சேர்ந்ததா என்பதை உறுதி செய்த பிறகு பொதுமக்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகே அவற்றை ஒரே நேரத்தில் திரும்ப பெற மாநில தேர்தல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.