சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவில் ஆட்சி இல்லை பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி திட்டவட்டம்
புதுச்சேரி: புதுவை மாநில பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.விழாவில் பங்கேற்ற பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., கூறியதாவது:பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வேறு அணியில் இல்லை. ஏ.எப்.டி., மில் தொழிலாளர் போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றது, மில்லை திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கும் போராட்டம் தான்.எம்.எல்.ஏ.,க்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, அங்கு தொழிலதிபர் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அந்த கருத்துக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் உடன்பட்டவர்கள் என கூறுவது உண்மையில்லை. இவை திரித்து சொல்லப்படுகிறது. அந்த தொழிலதிபரின் கருத்துக்கு உடன்பாடு இல்லை என பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் என்னிடம் கூறியுள்ளனர்.சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள் சபாநாயகருக்கு எதிராக தங்கள் கருத்துக்களைதெரிவித்துள்ளனர். அவர்கள் ஆதரவு இருந்தால் தான் நாங்கள் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை இல்லை.தொகுதியில் மக்கள் பணிகள் நடக்காததால் வெளிநபரை அழைத்து வந்து நலத்திட்டம் வழங்குகிறோம் என எம்.எல்.ஏ.,க்கள் கூறியது குறித்து விளக்கம் கோரப்பட்டது.அப்போது புயல் நிவாரணத்தை மனதில் வைத்தே பேசியதாக தெரிவித்தனர். அவர்கள் பா.ஜ.,வுக்கு எதிராகவும், முதல்வருக்குஎதிராகவும் பேசவில்லை. வரும்காலத்தில் அவர்கள் அப்படி பேசினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.