வாலிபரை கொலை செய்த 3 பேர் சிறையில் அடைப்பு
புதுச்சேரி: மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பரை கொலை செய்து வாய்க்காலில் வீசிய கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உழவர்கரை, பஜனை மடத்து வீதியை சேர்ந்தவர் சந்துரு,24; கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறம், வாயக்கால் பாலத்தில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். அதில், சந்துரு தன்னுடன் வேலை செய்த திப்புராயப்பேட்டை வெங்கடேஷ்,27; என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அவரது நண்பர்களான ராஜேஷ்,33; சரண்,24; ஆகியோருடன் சேர்ந்து, சந்துருவை வீட்டிற்கு வரவழைத்து, வெட்டி கொலை செய்து வீசியது தெரிய வந்தது. அதன்பேரில் வெங்கடேஷ் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது தப்பியோட முயன்றதில் தவறி விழுந்ததில் வெங்கடேஷ் மற்றும் ராஜேஷிற்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் சிகிச்சை அளித்த பின் நேற்று மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்களில் ராஜேஷ் மற்றும் சரண் மீது, மீது அடிதடி மற்றும் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.