உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் உண்டியல், கடைகளை உடைத்து திருடிய டியோ கேங் கைது; ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பைக், நகைகள் பறிமுதல்

கோவில் உண்டியல், கடைகளை உடைத்து திருடிய டியோ கேங் கைது; ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பைக், நகைகள் பறிமுதல்

புதுச்சேரி : புதுச்சேரியில் பல இடங்களில் கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணம், 15 பைக்குகள் திருடிய, 'டியோ கேங்' கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பைக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் பைக் திருட்டு மற்றும் வீடு புகுந்து திருடும் கும்பலை கண்டுபிடிக்க, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின்பேரில், கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு கோரிமேடு எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக பைக்கில் வந்த கடலுார், குமாரப்பேட்டை, புதுநகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அரவிந்த்,23; திலாஸ்பேட்டை வீமன் நகர், ஓடை தெருவை சேர்ந்த விஜய், 19; ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த பைக் ஜிப்மர் அருகே திருடியது என தெரியவந்தது. தீவிர விசாரணையில், கடலுார் குமாரபேட்டை, புது நகர், ஜெகதீஷ்வரன், 27; குமாரபேட்டை புதுநகர், விக்னேஷ், 20; ஆகாஷ், சந்தோஷ், சுகன், புதுச்சேரி வினோத் ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருடியது தெரிய வந்தது. இந்த கும்பல், தன்வந்திரி நகர் போலீஸ் நிலைய பகுதியில் 4 பைக், சேதராப்பட்டு 2, மேட்டுப்பாளையம் 1 பைக் மற்றும் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு, பாகூரில் 2 கோவிலில் நகை மற்றும் ஒரு பைக் திருடியுள்ளனர்.அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பெரியக்கடை, முத்தியால்பேட்டை, வில்லியனுார் ஆகிய பகுதிகளில் பைக் மற்றும் கடைகள் மற்றும் கோவில்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பகுதியான கிளியனுார் மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலைய பகுதியில் பைக் திருடியதும் தெரியவந்தது.இந்த வழக்கில் ஜெகதீஷ்வரன், விக்னேஷ் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். நால்வரிடம் இருந்து 15 பைக்குகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், 1.5 சவரன் தங்க நகை, 2 கோவில் உண்டியல் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம். கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

சிக்கியது எப்படி

கைது செய்யப்பட்ட விஜய் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. விஜய் தலைமையிலான இந்த கும்பல், டியோ பைக்கில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்ததால், இவர்களுக்கு 'டியோ கேங்' என போலீசார் பெயரிட்டனர். இந்த கும்பல் திருடிய விலை உயர்ந்த கே.டி.எம்., பைக்குகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். இதனை பார்த்த வடக்கு கிரைம் போலீசார், பெண் பேசுவதுபோல் விக்னேஷிடம் பேச்சு கொடுத்தனர். நேரில் சந்திக்கலாம் என கூறி வரவழைத்து விக்னேஷ், ஜெகனை கைது செய்தனர்.

எஸ்.பி.,கள் பாராட்டு

வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தன்வந்திரி நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ், வடக்கு கிரைம் டீம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜி மற்றும் காவலர்களுக்கு சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி.க்கள் வீரவல்லபன், பக்தவச்சலம், லட்சுமிசவுஜன்யா, வம்சீதரெட்டி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !