உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காணும் பொங்கல் கொண்டாட்டம் புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கல் கொண்டாட்டம் புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள், காணும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார விடுமுறை, புத்தாண்டு, பண்டிகை நாட்களில், சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட பன்மடங்காக அதிகரிக்கும்.இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் குவிந்தனர்.மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வர் உள்ளிட்ட கோவில்களில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர். முருங்கப்பாக்கம் கைவினை கிராம படகு குழாமில் அலையாத்தி காடுகளை ரசித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.மேலும் கடற்கரை, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இதனால் அனைத்து சுற்றுலா மையங்களில் அதிக எண்ணிக்கையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அதேபோல காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருப்பட்டினம், அம்பகரத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று பொங்கல் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் காரைக்கால் கடற்கரையிலும் ஏராளமானோர் குவிந்து மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !