உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வணிக திருவிழா பரிசு கொடுக்காமல் அலைக்கழிப்பு; தனியார் நிறுவன குளறுபடியால் வியாபாரிகள் பரிதவிப்பு

வணிக திருவிழா பரிசு கொடுக்காமல் அலைக்கழிப்பு; தனியார் நிறுவன குளறுபடியால் வியாபாரிகள் பரிதவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில் நடந்த வணிகத் திருவிழா குளறுபடியால், குலுக்கலில் தேர்வு பெற்ற வாடிக்கையாளர்கள் பரிசுகள் வாங்க முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை மற்றும் வணிகர் கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோறும் வணிக திருவிழா நடத்தி, பல கோடி ரூபாயிற்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த இவ்விழா, இந்தாண்டு அரசு நிர்ணயித்த தனியார் நிறுவனம் நடத்தியது.புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி பிராந்தியங்களை சேர்ந்த 581 வணிக நிறுவனங்கள் பங்கேற்ற இத்திட்டத்தில் மொத்தம் 40 லட்சம் கூப்பன்கள் வணிக நிறுவனங்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, குலுக்கல் நடத்தி, ரூ. 9 கோடி மதிப்பில் கார், ஸ்கூட்டர் என 7 வகையான மொத்தம் 84 ஆயிரத்து 920 பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு லட்சம் கூப்பனுக்கு ( ஒரு கார், 2 ஸ்கூட்டர், 10 டேபிள் டாப் வெட் கிரைண்டர், 10 மிக்கி, 100 கெட்டில், 1000 எவர்சில்வர் பாத்திர செட், 1000 பால் குக்கர்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி பரிசு கூப்பன் வழங்கும் பணி கடந்த அக்டோபர் 22ம் தேதி துவங்கி, பிப். 28ல் நிறைவு பெற்றது. இதன் பரிசு குலுக்கல் கடந்த மார்ச் 24ம் தேதி நடந்தது. அப்போது, இக்குலுக்கலை நடத்திய தனியார் நிறுவனம், அறிவிக்கப்பட்ட 40 லட்சம் கூப்பன்களில் 6 லட்சம் கூப்பன்கள் விற்காததால், 34 லட்சம் கூப்பன்களுக்கான 72 ஆயிரத்து 182 பரிசுகளை மட்டும் அறிவித்தது.அதில், முதல் பரிசு (கார்), 2ம் பரிசு (ஸ்கூட்டர்)களை இப்போட்டியை நடத்தும் சுற்றுலா துறையிடம் உரிய கூப்பனை ஒப்படைத்து பெற்றுக் கொள்ளலாம். பிற (மூன்று முதல் ஏழாம் ) பரிசுகளுக்கு தேர்வு பெற்றவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் அந்தந்த வணிக நிறுவனங்களில் கூப்பன்களை ஒப்படைத்து, பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.அதன்படி குலுக்கலில் வெற்றி பெற்ற பயனாளிகள், கடந்த 2ம் தேதி முதல், பரிசு கூப்பன்களுடன் வணிக நிறுவனங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், குலுக்கலை ஏற்று நடத்திய தனியார் நிறுவனம், மூன்று, நான்கு மற்றும் 5ம் பரிசுக்கான பொருட்களை நேற்றுவரை வணிக நிறுவனங்களுக்கு வழங்கவில்லை. 6 மற்றும் 7 ம் பரிசு பொருட்களை மட்டுமே கொடுத்துள்ளனர். அந்த பரிசுகளையும் முழுமையாக தராமல் ஒரு பகுதி மட்டுமே வழங்கியுள்ளனர்.இதனால், பரிசு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பதில் கூற முடியாமல் வணி நிறுவனத்தினர் தவியாய் தவித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள், பரிசு கிடைக்காமல், வணிக நிறுவனத்தினரிடம் மீண்டும் ஒரு முறை நாங்கள் பல கி.மீ., துாரத்தில் இருந்து திரும்பி வர வேண்டுமா எனக் கேட்டு வாக்குவாதம் செய்வதால், வணிர்கள் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக நடத்தப்பட்ட வணிக திருவிழாவால், வாடிக்கையாளர்களை இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பில் வணிகர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ