புதுச்சேரி- கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை (10ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவின் குமார் திரிபாதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் சிவசுப்புரமணிய சுவாமி கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை (10ம் தேதி) நடக்கிறது. இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளை (10ம் தேதி) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது.அதன்படி, புதுச்சேரியிலிருந்து கடலுார் செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், புதிய பைபாஸ் சாலை , கன்னியகோவில் முள்ளோடை வழியே கடலுார் செல்ல வேண்டும்.அதேபோல், கடலுாரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கன்னியகோவில் அருகே புதிய பைபாஸ் சாலை , அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் சாலை வழியாக செல்ல வேண்டும்.