புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
பாகூர்: கன்னியக்கோவில் தீ மிதி திருவிழாவையொட்டி, (7ம் தேதி) புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்து தெற்கு, மேற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் செய்திக்குறிப்பு: பாகூர் அடுத்த கன்னியக்கோவில், மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில், தீமிதி திருவிழா (7ம் தேதி) நடக்கிறது. இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில், தவளக்குப்பம் முதல் கன்னியக்கோவில் இடையே நாளை மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, வாகன போக்குவரத்து மாற்றுப் பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் கனரக வாகனங்கள் தவளக்குப்பம் சந்திப்பில் வலது புறமாகத் திரும்பி அபிஷேகப்பாக்கம், தேடுவார்நத்தம், விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக கடலுார் செல்ல வேண்டும். இலகுரக வாகனங்கள், பிள்ளையார்குப்பம் சந்திப்பு, மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், கொரவள்ளிமேடு, மதிக்கிருஷ்ணாபுரம், முள்ளோடை வழியாக கடலுார் செல்ல வேண்டும். அதேபோல், கடலுாரிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள், கன்னியக்கோவில் சந்திப்பில் இடது புறமாக திரும்பி விழுப்புரம் நாகப்பட்டினம் புறவழிச்சாலை, தேடுவார்நத்தம், அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் சந்திப்பிலிருந்து புதுச்சேரிக்கு செல்ல வேண்டும். அனைத்து இலகுரக மற்றும் கனரக வாகனங்களும், விரைவாக செல்ல விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவிச்சாலையை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் நேரங்களில் பொது மக்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ள விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை தவறாமல் பயன்படுத்தி, இந்த தற்காலிக ஏற்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.