செஞ்சி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி : புதுச்சேரி, செஞ்சி சாலையில் பாலம் வேலை துவங்குவதால், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போக்குவரத்து வடக்கு எஸ்.பி., ரச்சனா சிங் விடுத்துள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி நகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், செஞ்சி சாலை அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள பாலம் கட்டுமான பணி இன்று 10ம் தேதி துவங்க உள்ளது. அதனையொட்டி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி வரும் 10ம் தேதி முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, முத்தியால்பேட்டை எம்.ஜி. ரோட்டில் இருந்து செஞ்சி சாலை வழியாக செல்ல வேண்டிய பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும், அஜந்தா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை, 45 அடி சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும். நடுத்தர, இலகுரக டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் டெம்போ உள்பட அனைத்தும் ரங்கபிள்ளை வீதி, செஞ்சி சாலை சந்திப்பு வலதுபுறம் திரும்பி, ஆம்பூர் சாலை, சூர்கூப் வீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி செஞ்சி சாலை செல்லவேண்டும். சட்டசபை அலுவலக ஊழியர்கள் செஞ்சி சாலை வழியாக வழக்கம்போல் சட்டசபை பின்புற கேட்டிற்கு செல்லலாம். ஆம்பூர் சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள், தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைப்பிடித்து, ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.