உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நோயால் அவதிப்பட்ட மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை கோட்டக்குப்பம் அருகே சோகம்

நோயால் அவதிப்பட்ட மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை கோட்டக்குப்பம் அருகே சோகம்

கோட்டக்குப்பம்: மனநிலை பாதித்து அவதிப்பட்ட மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, திருவல்லிக் கேணியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 49; இவரது மனைவி வியாசர்பாடியைச் சேர்ந்த அபி, 54; இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி, கெங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தனர். திருமணமாகி 15 ஆண்டாகியும் குழந்தை இல்லை.இந்நிலையில் சர்க்கரை நோயிற்கு சிகிச்சை மேற்கொண்ட அபி, அதிக மாத்திரை சாப்பிட்டதில், சில மாதங்களுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டார். சம்பாதித்த பணம் முழுவதையும் சிகிச்சைக்கு செலவழித்தும் நோய் குணமாகவில்லை.அதில் விரக்தியடைந்த மணிகண்டன், சில தினங்களுக்கு முன் தனது மனைவியுடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களை, அங்கிருந்தவர்கள் காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பினர்.அதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டில் சாப்பாட்டில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.இந்நிலையில், இவர்களின் வீடு நேற்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அதேபகுதியில் வசிக்கும் மணிகண்டனின் அண்ணன் கோபால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மணிகண்டன் துாக்கிலும், அபி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.தகவலறிந்த கோட்டக் குப்பம் போலீசார் விரைந்து சென்று, இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.முதல்கட்ட விசாரணையில், மனைவிக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் அதிகரித்ததால், மனம் உடைந்த மணிகண்டன், நேற்று முன் தினம் இரவு வீட்டின் உள்புறமாக பூட்டிக்கொண்டு, துாங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு, அவரும் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இணை பிரியாத காதல் தம்பதிகள்

மணிகண்டனும், அபியும் வெளியில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வது வழக்கம். இருவரும் கையை பிடித்துக்கொண்டு தான் செல்வார்கள். சிறிய வருமானம் என்றாலும், மகிழ்ச்சியோடு பிரச்னையின்றி வாழ்ந்து வந்தனர். அபிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மணிகண்டன், தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kumaran
டிச 16, 2024 14:27

இன்றைய திருமணங்கள் பெருபாலும் சண்டை மற்றும் விவாகரத்து, ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டு உள்ளனர். அவர்கள் பார்வைக்கு இங்கு இவர் செய்தது சட்டப்படி தவறான முடிவு தான் என்றாலும். தன் மனைவியை தனக்கு பிறகு பார்த்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள் என எண்ணி தானும் உடன் மாய்த்து கொண்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை