8 கிலோ கஞ்சாவுடன் திருச்சி வாலிபர் கைது
புதுச்சேரி : புதுச்சேரியில் 8 கிலோ கஞ்சாவுடன் திருச்சி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி, வாணரப்பேட்டை, பில்லுக்கடை சந்திப்பு அருகே கஞ்சா விற்ற வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டம் முகிலன், 21; வரதராஜன், 23; சஞ்சீவி,25; ஆகியோரை ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் (பொ) கணேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 595 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், சிதம்பரம் அடுத்த புவனகிரியை சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா, கஞ்சா கொடுத்தது தெரியவந்தது. புதுச்சேரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கிழக்கு கிரைம் போலீசார் இணைந்து சூர்யாவை கைது செய்து விசாரித்தனர். அதில், அவருக்கு திருச்சி ராம்ஜி நகர் ரமேஷ் (எ) விசுவநாதன்,35; கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. போலீசார், விஸ்வநாதன் மொபைல் போன் டவரை ஆய்வு செய்ததில், அவர் ஒடிசாவில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று மாலை திண்டிவனம் வந்த விஸ்வநாதனை, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள், பக்தவச்சலம், ஜாகீர்உசேன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.அவர் ஒடிசாவில் இருந்து வாங்கி வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விஸ்வநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவான சரத் என்பவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.