உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்வான ஒன்றிய கவுன்சிலரை பதவி நீக்க உத்தரவு

போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்வான ஒன்றிய கவுன்சிலரை பதவி நீக்க உத்தரவு

சென்னை : சென்னை, கன்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிகா மீரான்; புழல் பஞ்சாயத்து ஒன்றிய வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவருக்கு எதிராக, விளாங்காடுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஷியா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:பஞ்சாயத்து ஒன்றிய இரண்டாவது வார்டு, ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்டது. மல்லிகா, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஹிந்து ஆதிதிராவிடர் என்று போலியாக ஜாதி சான்றிதழ் பெற்று போட்டியிட்டுள்ளார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன். ஒன்றிய வார்டு கவுன்சில் பதவியில் இருந்து, அவரை தகுதியிழப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. திருவள்ளூர் கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'பள்ளி சான்றிதழ், மல்லிகாவின் பெற்றோர் ஜாதி சான்றிதழை சரிபார்த்ததில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது. தேர்தலில் போட்டியிட, அவர் போலி சான்றிதழை சமர்பித்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது. அவரை தகுதியிழப்பு செய்ய, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.தன் கணவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில், இந்த வார்டில் போட்டியிட்டதாக, மல்லிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு, நீதிபதிகள், 'திருமணம் செய்வதால், ஒருவரின் ஜாதி மாறி விடாது; அவர்களின் குழந்தைகள், ஆதிதிராவிட சமூகத்தினருக்கான சலுகைகள் பெற உரிமை உள்ளது' என்றனர். பின், ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட, மல்லிகாவுக்கு தகுதி இல்லை என்பதால், அவரை கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை