இலக்கை தாண்டி நலத்திட்டங்களில் சாதனை; புதுச்சேரி அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
புதுச்சேரி : மத்திய அரசு திட்டங்களில் இலக்கை தாண்டி சாதித்த புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் மனோகர் லால் பாராட்டு தெரிவித்தார்.மத்திய மின்சாரம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். தொடர்ந்து, கவர்னர் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அரசு செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், உள்ளாட்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து படக்காட்சிகளுடன் துறை செயலர் ஜவகர் பட்டியலிட்டார்.தொடர்ந்து மத்திய அமைச்சர் மனோகர் லால் பேசியதாவது:புதுச்சேரி சிறிய மாநிலம். ஆனாலும் மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்புற மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்த இலக்கை தாண்டி நலத்திட்டங்களை செயல்படுத்தி, சாதித்து உள்ளீர். இதற்கு பாராட்டுகள்.தெருவோர வியாபாரிகளுக்கு அதிக அளவில் கடனுதவி செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்பிற்குரியது. இதன் மூலம் தெருவோர வியாபாரிகள் பொருளாதார ரீதியாக மேம்படுத்தியுள்ளனர். இது போன்ற திட்டங்களை புதுச்சேரி மாநிலம் சார்பில் கேளுங்கள். அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வு கூட்டத்தில் ஏமாற்றம்
மத்திய அமைச்சர் மனோகர் லால் நடத்திய ஆய்வு கூட்டத்தில், மின் துறையின் தனியார்மயக்கல் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்து விவாதம் எழவில்லை. புதுச்சேரி அரசு தரப்பிலும் எழுப்பப்படவில்லை. மின் துறையில் 84 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மின் சீரமைப்பு திட்டங்கள், அதன் டெண்டர் நிலை குறித்து இக்கூட்டத்தில் படக்காட்சிகளுடன் விவாதிக்கப்பட்டது.