மழை மீட்பு பணிக்கு உடனடி நிதி வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் மழை பாதிப்பு தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென லோக்சபா செயலருக்கு வைத்திலிங்கம் எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30, 1ம் தேதிகளில் கரையை கடந்ததால், புதுச்சேரியில் 50 செ.மீட்டர் வரை மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தினங்களாக பல பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.உணவு, தண்ணீர், பால் பாக்கெட் உள்ளிட்டவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக மழைநீர் உள் வாங்கவில்லை.இதில், மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு, மழை பாதிப்பு மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள கூடுதல் மீட்பு குழுவினரை புதுச்சேரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக புதுச்சேரிக்கு தேவையான நிதியை உடனே வழங்கிட வேண்டும்.மேலும், இதுதொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.