வாக்கத்தான் விழிப்புணர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் ெஹல்மெட் அணிவது குறித்து நடந்த 'வாக்காத்தான்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கடந்த, 12ம் தேதி முதல் கட்டாய ெஹல்மெட் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில், ெஹல்மெட் அணிவது குறித்து போக்குவரத்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகில், தேசிய பாதுகாப்பு மாதத்தையொட்டி, ெஹல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு 'வாக்கத்தான்' நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார். எஸ்.பி., செல்வம் முன்னிலை வகித்தார். காந்தி சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைப்பயணம், எஸ்.வி., பட்டேல் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி வழியாக சென்று மீண்டும் கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் முடிவடைந்தது.தொடர்ந்து போக்குவரத்து குறித்து நடந்த வினாடி - வினா போட்டியில், சரியாக பதில் அளித்த பொதுமக்களுக்கு போலீசார் ெஹல்மெட் வழங்கினர்.