நடிகர் விஜய்யின் த.வெ.க., மாநாட்டிற்கு ரங்கசாமி படத்துடன் வரவேற்பு பேனர்
புதுச்சேரி : நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழர் வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டிற்கு, புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி படத்துடன் வரவேற்பு பேனர் வைத்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி அருகே, வி. சாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, விஜய் ரசிகர்கள் பல இடங்களில் சுவர் விளம்பரம் வரைந்துள்ளனர். பேனர்களும் வைத்துள்ளனர்.இந்நிலையில் புதுச்சேரி, கருவடிக்குப்பம் இ.சி.ஆரில் சிவாஜி சிலை அருகே முதல்வர் ரங்கசாமி படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.பேனரில், 2026 ஆளப்போறான் தமிழன் என்ற வாசகத்துடன் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு... தளபதி விஜய் அழைக்கிறார் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும், பேனரில் வேட்டி சட்டையில் விஜய் நடந்து வருவதும், மறுபுறம் முதலமைச்சர் பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில், என்.ஆர்.காங்., கட்சியை துவங்கி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பில் உள்ள ரங்கசாமியின் ஆசியுடன் மாநாடு நடைபெறுவது போல் வைத்துள்ள பேனர், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.