முதுநிலை மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசின்... முடிவு என்ன
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கு விரைவில் விண்ணப்பம் விநியோகிக்க திட்டமிட்டுள்ள அரசு பணிகளை வேகப்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கினாலும், எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்கவில்லை. இன்னும் விண்ணப்ப படிவம் கூட வழங்கப்படவில்லை. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என, மருத்துவ மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், தற்போது விண்ணப்பம் விநியோகம் செய்ய திட்டமிட்டு பணிகளை அரசு சுகாதார துறை, சென்டாக் வேகப்படுத்தி வருகிறது. ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளை பொருத்தவரை கிளினிக்கல், நான் கிளினிக்கல் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் 450 சீட்டுகள் வரை உள்ளன. அரசின் முடிவு என்ன: முதுநிலை மருத்துவ படிப்புகளில் குடியிருப்பு அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் அண்மையில் அதிருப்தி தெரிவித்தது. மாநிலங்கள் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு குடியிருப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என, தீர்ப்பளித்துள்ளது. குறிப்பாக முதுநிலை மருத்துவ படிப்புகளில் குடியிருப்பு அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 14 பிரிவை மீறுவதாகும். அவ்வாறு மருத்துவ இடங்களை வாழ்வின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காது. அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும், மேற்படிப்பு இடங்களையும் அகில இந்திய பொதுவானதாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தத் தீர்ப்பு, புதுச்சேரி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மருத்துவ சேர்க்கையை பொருத்தவரை முதலில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. எம்.பி.பி.எஸ்., படிப்பாக இருந்தாலும் சரி, எம்.டி., எம்.எஸ்., படிப்பாக இருந்தாலும் சரி நிர்வாக இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து சீட்டுகள் நிரப்பப்படுகிறது. அப்படி நிரம்பாத இடங்கள் அடுத்து அகில இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளித்து நிரப்பப்படுகிறது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பில் திறமை அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டாம். குடியிருப்பு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியின் குடியிருப்பு இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனுவினை புதுச்சேரி அரசு விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.