போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுவது எப்போது; ரூ.99 கோடியில் அமைத்த கருவிகள் பாழாகும் அவலம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசாலை தவிர்க்க ரூ. 99 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் ஓராண்டிற்கு மேலாகியும் செயல்பாட்டிற்கு வராததால் நவீன கருவிகள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரியில், போக்குவரத்து பிரச்னைகளும் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசலால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் கடும் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைகளை சரி செய்ய 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் வருவாய் துறை இணைந்து ரூ. 99 கோடி செலவில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் கடந்தாண்டு துவங்கப்பட்டது. இத்திட்டத்தில், சிக்னல்களில் காத்திருக்கம் வாகனங்களில் எண்ணிக்கையை பொருத்து சிக்னல்கள் தானாக நேரத்தை நிர்ணயித்து கொள்ளும் திறன் கொண்ட ஏ.டி.சி.எஸ்., வசதியுடன் நவீன கேமராக்கள் 22 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நவீன கேமராக்கள் மூலம், சிக்னல்களில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை செய்வது, அதிவேகமாக செல்லும் வாகனம், போக்குவரத்து விதிமீறல் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்ணை படம் பிடித்து, வாகன உரிமையாளர் வீட்டிற்கே வழக்குபதிவு, அபராத தொகைக்கான சலான் அனுப்பும் வசதி உள்ளது. மேலும், நகரம் முழுதும் 35 சுழல் கேமராக்கள் உட்பட மொத்தம் 180 இடங்களில் 425 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும், இ.சி.ஆர்., நவீன மீன் அங்காடி முதல் தளத்தில் அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் போலீஸ், வருவாய், நகராட்சி, பொதுப்பணி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து நகர போக்குவரத்து நெரிசலின்றி ஒழுங்குபடுத்துவர். அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் முடித்து கடந்தாண்டு டிசம்பர் மாதமே செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ கட்டமைப்பு பணிகள் முடிந்து ஓராண்டிற்கு மேலாகியும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்பாட்டிற்கு வராததால், போக்குவரத்து நெரிசலில் மக்களின் அவதி தொடர்ந்து கொண்டுள்ளது. இத்திட்டத்தில் அமைத்துள்ள அனைத்து கருவிகளும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகும். இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்படும். மேலும், முறையாக பராமரிக்க வேண்டும். இந்நிலையில் பல கோடி செலவில் நவீன கருவிகள் அமைத்து ஓராண்டாகியும் இதுவரை செயல்பாட்டிற்கு வராமல் இருப்பதால், வெயிலிலும், மழையிலும் நனைத்து நவீன கருவிகள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த சுமார் ரூ.100 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட் ஒர்க்கை துண்டிக்கும்
சமூக விரோதிகள்
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் முழுமையும் 'நெட் ஒர்க்' மூலமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த நெட் ஒர்க் கேபிள் மின் கம்பங்கள் வழியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெட் ஒர்க் கேபிள்களை மர்ம நபர்கள் அடிக்கடி துண்டித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசில் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.