தேர்தலில் யாருக்கு சீட்டு?
புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக உள்ள என்.ஆர்.காங்., தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். கட்சி தொடங்கி மூன்று மாதத்திற்குள், அ.தி.மு.க., கூட்டணியுடன் 2011 ஆண்டு நடந்த முதல் தேர்தலில் என்.ஆர்.காங்., 15 இடங்களிலும், அ.தி.மு.க., 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்..- தி.மு.க., கூட்டணி 9 இடங்களில் மட்டுமே கரையேறியது. 2016ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்.. 8 இடங்களில் வெற்றி கிடைத்தது. 2021ம் ஆண்டு பாஜ., கூட்டணியுடன் சந்தித்த தேர்தலில் என்.ஆர்.காங்.,-10; பா.ஜ.,- 6 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த மூன்று தேர்தலிலும் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட ஏராளமானோர் ரங்கசாமியிடம் சீட் கேட்டு நச்சரித்தனர். சீட்டு கேட்ட அனைவருமே தேர்தல் நேரத்தில் பல கோடி ரூபாய் எங்களால் செலவு செய்ய முடியும் சீட்டு கொடுத்தால் மட்டும் போதும் என வாய் ஜாலத்தை காட்டி ரங்கசாமியிடம் சீட்டு வாங்கி தேர்தலில் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள் இரவு போட்டியிட்ட பெரும்பாலானோர், ரங்கசாமியின் வீட்டிற்கு வந்து வாக்காளர்களுக்கு கொடுக்க 'ப' விட்டமின் இல்லை. நீங்கள் கொடுத்தால் மட்டுமே தங்களால் ஜெயிக்க முடியும் என சோகத்துடன் கூடி நின்று, ரங்கசாமியை மன உளைச்சலுக்கு உள்ளாகினர். வேறு வழியின்றி அந்த நேரத்தில் தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் பிடித்து பணத்தை ஏற்படு செய்து கொடுத்தார். இதில் பல பேர், பணம் கொடுத்தும் தேர்தலில் மண்ணை கவ்வியது ரங்கசாமிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் தேர்தலில் இதே போல் பலர் கூறிக்கொண்டு, போட்டியிட சீட் கேட்டு ரங்கசாமியை தீவிரமாக சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு கட்சி சார்பில் தற்போது ஒரு புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தேர்தலுக்கு செலவு செய்யும் அளவிற்கு நிதி ஆதாரம் இருந்தால் மட்டுமே 'சீட்' கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். கட்சியிலிருந்து எவ்வித பண உதவியும் யாருக்கும் செய்து தரப்பட முடியாது என்பதை அடித்து கூறி வருகின்றனர். இதனால், சீட்டுடன், பணமும் கிடைக்கும் என்று சுற்றி வந்தவர்களுக்கு தற்போது கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.