இலவச அரிசி வழங்காதது ஏன்? முன்னாள் முதல்வர் பகீர் தகவல்
புதுச்சேரி: மக்களுக்கு சுத்தமான குடிநீர் கூட கொடுக்க முடியாத அரசு தேவையா என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர், கூறியதாவது: உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முருங்கப்பாக்கம், தட்டாஞ்சாவடி பகுதிகளில் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. இந்த குடிநீரை குடித்து வயிற்று போக்கு மற்றும் சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாகின்றனர். காங்., சார்பில் வினோபா நகர், சக்தி நகர், பிள்ளைத்தோட்டம் பகுதிகளில் ஆய்வு செய்தோம். சக்தி நகரில் தரமற்ற குடிநீரை குடித்தவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். 3 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டதாக அரசு கூறுகிறது. மக்களை ஏமாளிகள் என, அமைச்சரும், முதல்வரும் நினைக்கின்றனர். தரமான குடிநீர் கூட கொடுக்க முடியாத அரசு தேவையா? குடிநீரில் குளோரின் போடுவதில்லை, பரிசோதனை செய்வதில்லை. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உள்துறை அமைச்சர் வீட்டிற்கு சென்றவர் வைத்திருந்த 12 ஆயிரம் அமெரிக்கன் டாலர் திருடுபோயுள்ளது. அந்தளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ரேஷன் கார்டுகளுக்கு கடந்த 2 மாதமாக இலவச அரிசி வழங்கவில்லை. மார்க்கெட்டில் கிலோ ரூ.32க்கு விற்கும் அரிசியை, அரசு ரூ.47 க்கு வாங்குகிறது. இதன் மூலம் மாதம் ரூ.2 கோடி லஞ்சம் பெறப்படுகிறது. இதுகுறித்த கோப்பு, தற்போது கவர்னரிடம் உள்ளது. அவர், அரிசி கோப்பு குறித்து முதல்வர் அலுவலகத்தில் உள்ள இடைத்தரகரை அழைத்து விசாரித்துள்ளதாகவும், அதில் ஊழல் உறுதியானதால், கோப்பை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை முதல்வர் விளக்க வேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகளில், இதுவரை, 1,500 காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. ஆனால், 4,500 பணியிடங்களை நிரப்பியுள்ளதாக முதல்வர் கூறுகிறார். அதனை முதல்வர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வில் பூகம்பம்
நாராயணசாமி கூறுகையில், 'புதுச்சேரி பா.ஜ.,வில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. காங்., கட்சியில் இருந்து சுய லாபத்திற்காக ஓடியவர்கள், பா.ஜ., வை ஆக்கிரமித்து கொண்டு, பாரம்பரிய கட்சியினரை ஓரம் கட்டினர். அதனால், மூத்த பொறுப்பாளர்கள் பா.ஜ.,வில் இருந்து விலகி வருவதால், கட்சி ஆட்டம் காண துவங்கியுள்ளது' என்றார்.