புதிய பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பிற்கு இவ்வளவு தொகை ஏன்? ஸ்மார்ட் சிட்டி அலுவலகம் விளக்கம்
புதுச்சேரி : புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டிற்கு ஸ்மார்ட் சிட்டி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்கம்:புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்ட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 50 சதவீதம் நிதி மத்திய அரசின் பங்களிப்பு. இதற்காக மத்திய அரசு ஒப்புதுல் அளிக்கப்பட்ட தொகை ரூ.31.50 கோடி மட்டுமே. எனவே,நிதி நிலைமைக்கு ஏற்ப, ரூ.31.50 கோடிக்கு தரை தளத்திற்கான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.எனினும், எதிர்கால விரிவாக்கத்திற்காக, ஐந்து மாடி கட்டமைப்பிற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப வடிவமைப்புகளை, சென்னை ஐ.ஐ.டி., சரி பார்த்து உறுதி அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.29 கோடி மிக அதிகப்படியானது என கருத்து தெரிவிக்கப்பட்டது.இந்த இடம் ஒரு காலத்தில் ஏரியாக இருந்ததால், எதிர்கால விரிவாக்கத்திற்கு ஏற்ப அஸ்திவாரம் சரியாக பராமரிக்க வலுவான அடித்தளம் அமைத்தல் தவிர்க்க முடியாதது. இந்த பணிக்கு திட்ட மதிப்பீடு, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டியால், ரூ.32.38 கோடிக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஒப்பந்தப்புள்ளியில், 7 சதவீத குறைந்த புள்ளியில், ரூ.29.55 கோடிக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போதைய கட்டுமான அமைப்பில்,31 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பாகம், 4 போக்குவரத்து அலுவலகம், 3 பயணசீட்டு பதிவகம், 6 ஆம்னி பேருந்து அலுவலகம், 2 பயணிகள் இரவு தாங்கும் அறைகள், 1 விசாரணை அலுவலகம், 1 தகவல் மையம், 1 முதலுதவி அறை , 1 கட்டுப்பாடு அறை, நிர்வாக அலுவலகம், மின் அலுவலகம், பொருள் காப்பகம் ஆகியவற்றுடன் 46 பேருந்து துறைகள் அடங்கும்.மேலும் வாகனம் நிறுத்துவதற்கு 450 இரு சக்கர வாகனமும், 25 நான்கு சக்கர வாகனமும், 18 ஆட்டோ மற்றும் 10 டாக்ஸி நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது.தற்போது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு பஸ்கள்இயங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.