| ADDED : அக் 04, 2025 06:38 AM
புதுச்சேரி : சாலையோர வியாபார குழு தேர்தல் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது குறித்து பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி நகராட்சி நகர சாலையோர வியாபார குழுவிற்கு மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் 13 உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள 12 உறுப்பினர்கள் சாலையோர வியாபாரிகள் இருந்து தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். சாலையோர வியாபார குழுவிற்கு ஏற்கனவே 1,200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். புதுச்சேரி நகராட்சி உத்தரவின்படி கடந்தாண்டு இதேபோன்று ஜனவரியில் 10.01.2024 சாலையோர குழுவிற்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக 8ம் தேதி அத்தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது தேர்தல் நடக்கும் நாள் அன்றே இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த முறையில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என காரணம் கூறப்பட்டது. அதன்படி சாலையோர வியாபாரிகள் ஜி.பி.எஸ்., பதிவுடன் கடைகள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தற்போது 2,600 ஆக அதிகரித்தது. இப்போது வெளியூர் வியாபாரிகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, கடையே இல்லாதவர்களுக்கு, கடையை நடத்தாமல் உள்வாடகை விடுபவர்களும் ஓட்டுக்கு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே முதல்வர் ரங்கசாமி வரை புகார் சென்று தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தேர்தலை இரண்டாவது முறையாக நிறுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்த ரெடியாகி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.