லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் வாகன தடை அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?
புதுச்சேரி : ஹெலிபேடு மைதானத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். 'லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் வாக்கிங்' செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், எஸ்.எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் உத்தரவின்பேரில் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், ெஹலிபேடு மைதானத்தின் மூன்று நுழைவு வாயில்களை 'பேரிகார்டு'கள் வைத்து வாகனங்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுழைவுவாயில்களில் போலீசாரும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், போலீசார் இல்லாத நேரங்களில் தடையை பொருட்படுத்தாமல் மைதானத்திற்குள் அத்துமீறி அசுர வேகத்தில் பைக்குகள் பறக்கின்றன. மைதானத்தில் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் 'வாக்கிங்' செல்கின்றனர். சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடுகின்றனர். பெற்றோர் முன்னிலையில் மழலைகள் சிறிய வண்டிகளில் நடை பயில்கின்றனர். அந்த நேரத்தில், மைதானத்திற்குள் அசுர வேகத்தில் நுழையும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகின்றது. குழந்தைகளும், வாக்கிங் செல்வோரும் பதறி ஓடும் நிலை ஏற்படுகிறது. மைதானத்திற்குள் வாகனங்கள் செல்லக்கூடாது என தடை விதித்திருந்தாலும், எந்த இடத்திலும் அது குறித்த அறிவிப்பு பலகை இல்லை. எனவே தடையுத்தரவு தெரியாமலும் மைதானத்திற்குள் பைக்குகளில் சென்று விடுகின்றனர். தடை அறிவிப்பு பலகை பார்த்தால் விலகி சென்றுவிடுவர்.எனவே, ெஹலிபேடு மைதானத்திற்குள் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளது குறித்து, மூன்று நுழைவு வாயில்களிலும் தடை நேரத்துடன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அப்படியே தாகூர் அரசு கல்லுாரி, ஏர்போர்ட் சாலையில் பார்க்கிங் இடங்கள் குறித்த அறிவிப்பு பலகையும் ஆங்காங்கே வைத்து, வாகனங்களை ஒழுங்குப் படுத்த டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.எஸ்.பி.,யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.