குஜராத் டயாலிசிஸ் திட்டம் புதுச்சேரியில்... அமல்படுத்தப்படுமா?
புதுச்சேரி: குஜராத் டயாலிசிஸ் மாடலை புதுச்சேரியில் அமல்படுத்த கவர்னர் கைலாஷ்நாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் சிறுநீரக செயல் இழப்புகளுக்காக டயாலிசிஸ் செய்து கொள்ளுவது அதிகரித்து வருகிறது. எனவே குஜராத் டயாலிசிஸ் மாடலை புதுச்சேரியில் அமல்படுத்த முந்தைய கவர்னர் தமிழிசை உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர்கள் குஜராத்தில் முகாமிட்டு அம்மாநிலத்தில் உள்ள டயாலிசிஸ் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். அதன்பிறகு ராஜ்நிவாசில் பல்வேறு ஆய்வு கூட்டங்களும் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் மாநிலத்தில் செயல்படுத்தப்படாமல் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. முந்தைய கவர்னர் தமிழிசை ராஜினாமா செய்த பிறகு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை மாநிலம் முழுவதும் 254 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளது. இதில் அரசு பொதுமருத்துவமனையில் 120 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. ஆண்டிற்கு 12 ஆயிரம் பேருக்கு தற்போது டயாலிசிஸ் அளிக்கப்பட்டு வருகிறது.வாழ்க்கை நிலை மாற்றம், உணவு பழக்கம், இதர காரணங்களால் சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் குஜராத்து மாநிலத்தினை போன்று புதுச்சேரியிலும் டையாலிசிஸ் சிகிச்சையை அதிகரித்தால், விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும். குஜராத் மாடல் என்ன சொல்லுது
புதுச்சேரியில் தற்போது அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தேசிய டையாலிஸ் திட்டத்தின் கீழ் 2,300 ரூபாய் செலவிலும் பதிவு செய்து சிகிச்சை பெற முடியும்.ஆனால், குஜராத்தில் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமின்றி மேல் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கான நிதியை மாநில அரசு ஏற்றுக்கொள்ளுகிறது. குஜராத் மாடல் டையாலிசிஸ் புதுச்சேரிக்கு வரும்போது அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார ரீதியானஇழப்பும் குறையும்.கவர்னர் கைலாஷ்நாதன் குஜராத் மாநில முதல்வர் அலுவலகத்தில் 2006ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நிழலாக இருந்தவர். தலைமை செயலர் உள்பட 18 ஆண்டுகள் குஜராத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.எனவே குஜராத் டயாலிசிஸ் சிகிச்சை திட்டத்தின் நன்மைகள் குறித்து அனைத்துமே அவருக்கு அத்துபடி, இது போன்ற சூழ்நிலையில் அவர் தற்போது புதுச்சேரின் கவர்னராக உள்ளது வரபிரசாதமே. எனவே குஜராத் மாநில ஸ்டைலில் டயாலிசிஸ் சிகிச்சையை புதுச்சேரியில் விரைவாக அமல்படுத்த கவர்னர் கைலாஷ்நாதன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான கட்டடமைப்புகளை அரசு பொது மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும்.
இது தான் குஜராத் டயாலிசிஸ் திட்டம்
குஜராத்தில் ஏ-ஒன் என்ற பெயரில் டயாலிசிஸ் திட்டம் மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்படுகிறது.இது கடந்த 2010ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வையுடன் ஆரம்பித்தார். இப்போது குஜராத்தில் 161 அட்வான்ஸ்டு டயாலிசிஸ் சென்டர் 33 மாவட்டங்களில் செயல்படுகிறது. 800க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் மெஷின்கள் 161 மையங்களிலும் இயங்கி வருகிறது. ஓராண்டில் 2,64,167 டயாலிசிஸ் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி 15 லட்சம் டயாலிசிஸ் சுழற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே குடையின் கீழ் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.