உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசின் கூடுதல் நிதி புதுச்சேரிக்கு... கிடைக்குமா? :திருத்திய பட்ஜெட்டிற்கு தயாராகும் அரசு துறைகள்

மத்திய அரசின் கூடுதல் நிதி புதுச்சேரிக்கு... கிடைக்குமா? :திருத்திய பட்ஜெட்டிற்கு தயாராகும் அரசு துறைகள்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, திருத்தப்பட்ட பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த மார்ச் 12ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ. 13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. பட்ஜெட் தாக்கலின்போது மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 7,641.40 கோடியாகவும், மாநில பேரிடர் நிவாரண நிதி, மத்திய அரசின் நிதியுதவி ரூ.3,432.18 கோடி, மத்திய சாலை நிதி ரூ.2 கோடி, மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.400 கோடியாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த ஆண்டின் இறுதிக்குள் வரவு - செலவுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் வராமல் போயிருக்கலாம். அதற்குத் தக்கவாறு செலவுகளைக் குறைக்க வேண்டி இருந்திருக்கலாம். அல்லது சில புதிய செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். இதனை எல்லாம் அடுத்து வருகின்ற, சட்டசபை கூட்டங்களில் திருத்திய பட்ஜெட் மதிப்பீடுகளாக ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்யப்படும். எனவே திருத்திய பட்ஜெட்டினை தயாரிக்க அனைத்து துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரும் 10ம் தேதிக்குள் ஒவ்வொரு துறையும் இதுவரை செலவிட்ட தொகை, கூடுதல் நிதி தேவையா... தேவையில்லையா என, அனைத்து நிதி செலவின விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இது கைக்கு கிடைத்ததும், புதுச்சேரி அரசின் திருத்திய முழு பட்ஜெட் டிசம்பரில் தயாராகிவிடும். அதன் பிறகு சட்டசபையில் வைக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. செலவினம் அரசின் நிதி ஆதாரத்தின் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.2,650 கோடி சம்பளத்துக்கும், ரூ.1,566 கோடி ஓய்வூதியத்திற்கும், ரூ.1,867 கோடி கடன், வட்டி செலுத்தவும், ரூ.2,546 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் மற்ற முக்கிய நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி, காஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ.2,100 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.523 கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக 1,1148 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினம் முழுதுமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் நிதி மத்திய அரசு கடந்த நிதியாண்டில் (2023-24) திருத்திய மதிப்பீட்டில் கூடுதலாக ரூ.271 கோடியை புதுச்சேரிக்கு வழங்கியது. குறிப்பாக 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத் தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக வழங்கியது. இதன்மூலம் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், 1,500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்தனர். இதேபோல் கடந்த 2024-25ம் ஆண்டில் பெஞ்சல் புயலின்போது 600 கோடியை புதுச்சேரி அரசு கூடுதல் நிதியாக கேட்டது. ஆனால் மத்திய அரசு 33 கோடியை மட்டுமே விடுவித்தது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் திருத்திய மதிப்பீட்டில் கூடுதல் தொகை வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம், புதுச்சேரி அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. எனவே, இந்தாண்டும் மத்திய அரசின் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை