வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வரவேற்க தக்கது
புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டட இடிபாடு கழிவுகளை தனியாக பிரித்து மேலாண்மை செய்யும் திட்டத்தை அரசு உள்ளாட்சி துறை வாயிலாக செயல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் குப்பைகளுக்கு அடுத்து மாநிலத்திற்கு தலைவலியாக இருப்பது கட்டட மற்றும் இடிபாடு கழிவுகள். தினம் தினம் கட்டடங்கள் இடிக்கப்படுவதும், அவை கண்ட இடங்களில் கொட்டி குவிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சாலையோரம், நீர்நிலைகளில் கட்டட கழிவுகள் கண்டமேனிக்கு கொட்டப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டுவது சட்டவிரோதமானது. 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்டட மட்டும் இடிப்பு கழிவு மேலாண்மை சட்ட மும் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆனால் புதுச்சேரியில் இந்த நடைமுறை சுத்தமாக கடைபிடிக்கப்படவில்லை. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைப்பதில்லை. இடிக்கப்பட்ட கட்டட கழிவுகளை இரவோட இரவாக சாலையோரம் உள்ள வாய்க்கால், ஏரி, குளங்களில் கொட்டி துார்ந்து போக செய்கின்றனர். இதனால், துார்ந்து போன வாய்க்கால், நீர்நிலைகள் நம் கண் முன்னே நிறைய உதாரணமாக உள்ளன. இது அரசுக்கு மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது. வீடுகளை இடிக்கும் கட்டட உரிமையாளர்கள் தான், பொறுப்புள்ள குடிமகனாக, கட்டடக் கழிவுகளைச் சாலையோரங்களில் கொட்டுவதைத் தவிர்த்து, முறையாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் பலருக்கும் கட்டட கழிவுகளை யாரிடம் கொடுப்பது, அவற்றை எப்படி அகற்றுவது என்று தெரியவில்லை. லாரி உரிமையாளர்களிடம் அகற்ற சொல்லிவிட்டு கையில் பணத்தை திணித்துவிட்டு அமைதியாகி விடுகின்றனர். கட்டட இடிபாடுகளை அள்ளிய லாரிகளும் எந்த இடத்தில் கொட்டுவது என, தெரியாமல் நகரத்தை சுற்றி வந்து நெடுஞ்சாலைகளில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். தமிழகத்தில் கட்டடக் கழிவுகளைச் சாலையோரங்களில் அல்லது பொது இடங்களில் சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் விதிக்கின்றன. உதாரணமாக, சென்னை மாநகராட்சியில் இந்த விதிமீறல்களுக்கான அபராதத் தொகை ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே துணிச்சலாக பகல் நேரத்தில் கூட ஆள்அவரற்ற நெடுஞ்சாலைகளில் கட்டட கழிவுகளை கொட்டிவிட்டு செல்லுகின்றனர். இப்படியே போனால் சாலையோர வாய்க்கால் கள், நீர்நிலைகள் துார்ந்து போய் சிக்கலை ஏற்படுத்தி விடும். அரசு தான் பல கோடி செலவிட்டு மீண்டும் துார்வார வேண்டி இருக்கும். அரசுக்கு இந்த தண்ட செலவு தேவையா... கட்டடக் கழிவுகளை மறு சுழற்சி மூலம் புதிய கட்டுமானங்களில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் இன்றைக்குப் பெருகியுள்ளன. கட்டுமானக் கழிவுகள் குப்பையல்ல. அவை மறுசுழற்சி செய்யக்கூடிய வளங்கள். செங்கல், கான்கிரீட் போன்ற கழிவுகளைச் சரியான முறையில் மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பி மீண்டும் பயன்படுத்தலாம். எனவே, வீடுகளை இடிக்கும்போதே கட்டட கழிவுகளை மட்டும் வீட்டு உரிமையாளர்களிடம் பெறுவதற்கான தனி வாகன வசதிகளையும், அதற்கான தொடர்பு எண்களையும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் வாயிலாக அரசு அறிவிக்க வேண்டும். அப்படியே கட்டுமான, இடிபாட்டுக் கழிவுகளைச் சேர்ப்பது, அவற்றை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது, அவற்றிலிருந்து மறு பயன்பாடு, மறு பயனீடுக்கான பொருட்களைத் தயாரிப்பதில் தகுந்த தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும். மறு பயன்பாடு, மறு பயனீடு செய்வதற்கும் வரிச் சலுகைகளை அளிப்பதற்கு முன்வர வேண்டும்.
புதுச்சேரியில் கட்டட இடிபாடுகளை அகற்ற லாரிக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதை கொடுப்பதற்கு பயந்தே பலரும் கட்டட இடிபாடுகளை கொடுக்க தயக்கம் காட்டி பொது இடங்களில் நீர்நிலைகளில் கொட்டுகின்றனர். இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். இதேபோல் கட்டட இடிபாடுகளை அகற்ற 3.4 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த உள்ள மறுசூழற்சி மையத்தையும் விரைவாக கொண்டு வர வேண்டும்.
வரவேற்க தக்கது