மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
திருபுவனை: மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் போக்குரவத்து நெரிசலை தடுக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. ஏற்கெனவே 16 மீட்டர் சாலையாக இருந்தபோது, ஏற்பட்ட போக்குரவத்து நெரிசலைவிட தற்போது நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்னர் காலை, மாலை அலுவலக வேலைநேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசலை தினம் சந்திக்க வேண்டி இருப்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியுற்று வருவது தொடர்கதையாக உள்ளது.கடந்த 22ம் தேதி மாலை ஏற்பட்ட போக்குரவத்து நெரிசலில் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், திருக்கனுார் என நான்கு திசைகளிலும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றதால் 3 மணி நேரம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.கடந்த ஆகஸ்ட்டு மாதம் நான்குமுனை சந்திப்பில் புதிதாக சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு, மின் இணைப்புகள் உள்ளிட்ட பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது.இரண்டு மாதங்கள் கடந்தும் சிக்னல் விளக்குகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே தொடரும் போக்குரவத்து நெரிசலை கட்டுப்படுத்த, தயார் நிலையில் உள்ள சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர புதுச்சேரி அரசும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.