ஞானம் இல்லாமல் பகவானை அறியமுடியாது ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம்
புதுச்சேரி: இறைவனை சொல்லில் அடைக்கவும் முடியாது. உள்ளத்தில் கொள்ளத் தான் முடியும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம் செய்தார். முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவ உபன்யாசம் கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகின்றது. நேற்றைய ஒன்பதாம் நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்: திருப்பாவையின் 9 வது பாசுரத்தில் ஒன்பது நவரத்னங்களாக நமக்கும் பகவானுக்கும் உள்ள 9 வித உறவுகள் உள்ளுரையாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜீவாத்காக்களாகிய நமக்கும் பகவானுக்கும் உள்ள ஒன்பதுவிதமான உறவுகளை 9ம் பாசுரத்தின் உள்ளுறைப் பொருளாக அனுபவிக்கலாம். அந்த உறவுமுறைகள்: தந்தை -மகன் உறவு, காப்பவன் - காக்கப்படுபவன் கணவன் மனைவி, அனுபவிப்பவன் - அனுபவிக்கப்படுபவன், அறிபவன் — அறியப்படுபவன், ஆண்டான் - அடிமை, ஆண்டான் — அடிமை, தாங்குபவன் — தாங்கப்படுபவன்,உடல்--உயிர் என்ற ஒன்பது விதமான முறைகள். பகவான் கண்ணன் பகவத் கீதையில் உபதேசித்துள்ள ஒரு கருத்தை இந்தப் பாசுரம் உணர்த்தும் உள்ளுறைப் பொருளை உணர வைக்கும். உலகத்தில் சம்சாரிகள் எதில் விழித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதில் ஞானிகள் தூங்குகிறார்கள். ஞானிகள் எதில் விழித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதில் சம்சாரிகள் தூங்குகிறார்கள் என்பது கீதையில் பகவான் சொன்ன வாக்கு. பகவத் கீதையில் சொன்னதை திருப்பாவையில் “கண் வளரும்” எனும் பதத்தால் கோதாப் பிராட்டி சொல்கிறாள். மஹா ஞானிகள் பகவதனுபவத்தில் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். லோக விஷயங்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நித்ய சம்சாரிகள் நிலை வேறாக இருக்கிறது. எனவே, கண் வளர்தல் என்பதில் சகலத்தையும் மறந்து பகவானைப் பற்றி நிற்கும் வைராக்யத்தைக் காட்டுகிறாள். எனவே தான், ஞானம், அனுஷ்ட்டானம், வைராக்யம் மூன்றும் சித்திக்க வேண்டும் என பகவதி கீதையான திருப்பாவையில் கூறப்பட்டுள்ளது. உபன்யாசம் நேரம் மார்கழி மாகோற்சவ உபன்யாசம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றது. தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை உபன்யாசத்தை கேட்கலாம்.