தொழில்துறைகளில் பொருட்களின் பாதுகாப்பு, செயல்பாடு பயிலரங்கம்
புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் ஆராய்ச்சி -மேம்பாட்டு மையம், ஏ.எம்.பி.பி., இந்தியா சென்னை கிளை சார்பில் ‘தொழில்துறைகளில் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு’ தலைப்பில் சிறப்புச் பயிலரங்கம் மற்றும் எஸ்.எம்.வி.இ.சி. மாணவர் கிளைத் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜராஜன் மற்றும் இணைச் செயலாளர் வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினர். கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி வரவேற்றார். நிகழ்ச்சியில், மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் காமாச்சி முதலி பங்கேற்று சிறப்புரையாற்றினார். சென்னையின் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி வெங்கடேசன், டில்லி ஏ.எம்.பி.பி., இந்தியா செயல்பாடுகளின் இயக்குனர் சஞ்சய் நம்டியோ, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பகுப்பாய்வு வேதியியல் துறை தலைவர் ஸ்ரீதர் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குனர் பாலசிவானந்த பிரபு ஆகியோர் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். ஏற்பாடுகளைத் தேர்வுத் துறை கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி டீன் வேல்முருகன், கல்வித் துறை டீன்கள் அன்பு மலர் மற்றும் அறிவழகர், வேலைவாய்ப்புத் துறை டீன் கைலாசம் மற்றும் துறைத் தலைவர்கள் செய்திருந்தனர். இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.