உலக சுற்றுச்சூழல் தின விழா
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாடுக் குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., வாழ்த்தினார். தலைமை செயலர் சரத் சவுகான், நோக்கவுரையாற்றினார். அரசு செயலர் ஸ்மிதா வரவேற்றார். விழாவில், 2025--26 ஆண்டிற்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை மற்றும் புதுச்சேரியின் பாரம்பரிய மரங்கள் கையேடும் வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பெட் பாட்டில் டிராப் மெஷின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தொடர்ந்து, பணியாற்றி வரும் தனசுந்தராம்பாள் தொண்டு நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் விருதும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான ஆய்வுகளில் சிறந்து விளங்கிய கல்லுாரி மாணவர்களுக்கு காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர் விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் நன்றி கூறினார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்பும் நோக்கில், சிம்சன் ராஜா மற்றும் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், தொழிற்சாலை நிர்வாகிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.