ஜிப்மர் செக்யூரிட்டி ஐபேடு திருடியவர் கைது
புதுச்சேரி: ஜிப்மரில் செக்யூரிட்டியின் ஐபேடு திருடியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், இலவம்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ், 34. இவர் ஜிப்மரில் செக்யூரிட்டியாக உள்ளார்.கடந்த, 8ம் தேதி பணியில் இருந்த போது தன்னுடைய விலை உயர்ந்த ஐபேடு, ஐபேட் பென்சில் உள்ளிட்டவற்றை அங்குள்ள விடுதி அறையில் வைத்தார். பணி முடித்து மீண்டும் விடுதி அறைக்கு சென்ற போது, வைக்கப்பட்டிருந்த பொருட்கள் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து அவர் தன்வந்திரி நகர் போலீசில் கொடுத்த புகாரையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனை சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சேலம் மாவட்டம், கொளத்துாரை சேர்ந்த கார்த்திக், 44 என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.