ஆசிய பாட்மின்டன்: சிந்து விலகல்
புதுடில்லி: ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சிந்து விலகினார்.சீனாவில், பிப். 11-16ல் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (கலப்பு அணி) தொடர் நடக்க உள்ளது. இந்திய அணி, 'டி' பிரிவில் மக்காவ் (பிப். 12), தென் கொரியா (பிப். 13) அணிகளுடன் உள்ளது. இந்திய அணியில் சிந்து, லக்சயா சென், பிரனாய், சாத்விக், சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இத்தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய நட்சத்திரங்கள், அசாமின் கவுகாத்தியில் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றனர்.பயிற்சியின் போது தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டதால், இத்தொடரில் இருந்து சிந்து விலகினார். கடந்த 2023ல் துபாயில் நடந்த இத்தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் சிந்து இடம் பிடித்திருந்தார்.இதுகுறித்து சிந்து வெளியிட்ட செய்தியில், 'ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியாதது வேதனை அளிக்கிறது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் குணமடைய சிறிது நாட்கள் தேவைப்படும் என்பதால் விலக வேண்டியதாயிற்று. இந்திய அணி சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்,' என தெரிவித்திருந்தார்.