ஆகாச தீபமாய் ஜொலித்த ஆகாஷ் தீப்: 2வது டெஸ்டில் அசத்தல் பந்துவீச்சு
கிறைஸ்ட்சர்ச்: கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் ‘வேகத்தில்’ மிரட்டிய இந்தியாவின் ஆகாஷ் தீப், நியூசிலாந்து அணிக்கு ‘செக்’ வைத்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் நேற்று கிறைஸ்ட்சர்ச், ஹாக்லி ஓவல் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். லதாம் அரைசதம்
நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம், கான்வே நல்ல அடித்தளம் அமைத்தனர். பும்ராவின் முதல் ஓவரில் லதாமிற்கு அம்பயர் எல்.பி.டபிள்யு., கொடுத்தார். ‘ரிவியு’ சாதகமாக அமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘டக்’ அவுட்டாகாமல் தப்பினார். ஆகாஷ் தீப் பந்தில் லதாம் (29 ரன்னில்) கொடுத்த ‘கேட்ச்சை’ இரண்டாவது ‘ஸ்லிப்’ திசையில் நின்ற ராகுல் நழுவவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த நிலையில், குர்னுார் பிரார் ‘வேகத்தில்’ கான்வே (31) எல்.பி.டபிள்யு., ஆனார். இது, டெஸ்டில் இவரது முதல் விக்கெட்டாக அமைந்தது. பிரார் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லதாம், டெஸ்டில் 32வது அரைசதம் எட்டினார். விக்கெட் சரிவு
இந்த சமயத்தில் லதாமை (59) அவுட்டாக்கிய ஆகாஷ் தீப், திருப்பம் ஏற்படுத்தினார். கம்போஜ் பந்தில் ஹென்றி நிக்கோல்ஸ் (16) நடையை கட்டினார். தொடர்ந்து மிரட்டிய ஆகாஷ் தீப் ‘ஆபத்தான’ ரச்சின் ரவிந்திராவை (0) வெளியேற்றினார். 41 ஓவரில் 110/1 என இருந்த நியூசிலாந்து, 44 ஓவரில் 110/4 ரன் என, 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. டேரில் மிட்சல், டாம் பிளண்டல் சிறிது நேரம் போராடினர். வாஷிங்டன் வலையில் மிட்சல் (31) சிக்கினார். பின் பிளண்டல், கிளன் பிலிப்ஸ் நிதானமாக ஆடினர். 6வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர். தனது 50வது டெஸ்டில் பங்கேற்ற பிளண்டல் அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246/5 ரன் எடுத்திருந்தது. பிளண்டல் (53 ரன், 117 பந்து), பிலிப்ஸ் (36 ரன், 64 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப், 2 விக்கெட் சாய்த்தார். இன்று நியூசிலாந்தின் எஞ்சிய விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் விரைவாக வீழ்த்த வேண்டும்.